Published : 03 Dec 2019 10:26 AM
Last Updated : 03 Dec 2019 10:26 AM

அயோத்தி வழக்கு: முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீர் நீக்கம்

ராஜீவ் தவான் -கோப்புப் படம்

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர்.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஜமாயத் உலமா அமைப்பு சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார். ராஜீவ் தவானுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் தவான் கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளதாக மதானி தரப்பில் இருந்து எனக்கு தகவல் தரப்பட்டுள்ளது. நான் உடல்நலம் இல்லாமல் இருப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது முட்டாள் தனமானது. தங்கள் தரப்புக்கு எந்த ஒரு வழக்கறிஞரையும் நியமித்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக அவர்கள் கூறும் காரணம் உண்மையானதல்ல’’ எனக கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x