Published : 02 Dec 2019 05:24 PM
Last Updated : 02 Dec 2019 05:24 PM
2024-ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மற்ற நான்கு கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்கிறன. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 இடங்களில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் 43 மற்றும் ஆர்.ஜே.டி மற்ற ஏழு இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஆளும் பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். சக்ரதார்பூரில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் தற்போது அனுமதியளித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைந்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்கு வங்கியாக சில கட்சிகள் கருதலாம். ஆனால் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டுக்குள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள். 2024-ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT