Published : 02 Dec 2019 06:01 PM
Last Updated : 02 Dec 2019 06:01 PM
2019, ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் 3.46 லட்சம் விபத்துகளும், அதில் 1.12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதும் வேதனை அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் குறித்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
''மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சாலை பாதுகாப்பு, விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால், சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை நான் பார்த்த பின் மிகுந்த வருத்தமடைந்தேன். ஏனென்றால், சாலை விபத்துகள் எண்ணிக்கையில் எந்தவிதமான மாற்றமோ குறைவோ இல்லை.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 26 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் உச்ச நீதிமன்றக் குழுவின் சாலை பாதுகாப்புக் குழு விபத்து குறித்து புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டது. அதில் 2018-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக விபத்துகள் எண்ணிக்கை 2.2 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது
2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3.39 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 735 பேர் உயிரிழந்துள்ளார்கள். 3.45 லட்சம் பேர் காயமடைந்துள்ளார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டில் 3.46 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்தனர். 3.55 லட்சம் பேர் காயமடைந்தார்கள். சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் இருத்தல், முறையற்ற வகையில் சாலைகள் அமைத்தல் ஆகியவை விபத்துகள் அதிகமாக நடப்பதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். அதிகமான விபத்துகள் நடக்கும் சாலைகளைக் கண்டறிய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன, அபராதங்கள் இருக்கின்றன. இவற்றின் நோக்கம் மக்களை விபத்துகளில் இருந்து காப்பதும், விபத்துகள் நடக்காமல் தடுப்பதும்தான்.
அதிவேகமாகச் செல்லுதல், மொபைல் பேசி வாகனத்தை இயக்குதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிக சுமை ஏற்றிச் செல்லுதல், மோசமான வெளிச்சம், சிவப்பு விளக்கை மீறிச் செல்லுதல், அதிவேகமாக முந்துதல் போன்றவை விபத்துக்கான காரணங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன''.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT