Last Updated : 02 Dec, 2019 01:23 PM

 

Published : 02 Dec 2019 01:23 PM
Last Updated : 02 Dec 2019 01:23 PM

எங்களைப் போல் அல்லாமல் ஹைதராபாத் பெண்ணுக்கு விரைவாக நீதி வேண்டும்: நிர்பயா தாயார் வலியுறுத்தல்

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

நிர்பயா வழக்கில் எங்களுக்குத் தாமதமாக நீதி வழங்கியதைப் போல் இல்லாமல், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் அவருக்கு விரைவாக நீதி வழங்க வேண்டும் என்று நிர்பயா தாயார் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை, அவரை நிர்பயா என்றே அழைத்தனர். மாணவியைப் பலாத்காரம் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

ஆனால், இதில் குற்றவாளிகளுக்கு இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கருணை மனு அளித்தார். அந்தக் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டாம் என்று டெல்லி அரசு சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:

''என்னுடைய மகள் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்கக் கோரி டெல்லி அரசு துணை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ததை வரவேற்கிறேன். குற்றவாளிகள் 5 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், இன்னும் அவர்களைத் தூக்கிலிடுவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. விரைவில் எங்களுக்கு நீதி கிடைக்கும். நம்முடைய நீதித்துறையில் சில ஓட்டைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

என்னுடைய மகள் வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்து 2 முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. ஆனால் இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை.

அனைவருக்கும் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். நீதி பெறுவதில் ஏராளமான தாமதம் இருந்து வருகிறது. இதுபோன்று தாமதங்கள் இருந்தால், சமூகத்தில் என் மகளைப் போன்று மற்ற மகள்களும் பாதிக்கப்படுவார்கள். நீதித்துறை தனது நீதிபரிபாலனத்தை இன்னும் விரைவாக, கட்டுக்கோப்புடன் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என் மகளைக் கொலை செய்தவர்களுக்கு விரைவாகத் தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும்.

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் காட்டுமிராண்டித்தனமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அதைச் செய்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

இது சமூகத்துக்கு தவறான செய்தியைச் சொல்லும். எங்களைப் போல் 7 ஆண்டுகள் போராடி நீதி கிடைத்தது போன்று ஹைதராபாத் பெண்ணுக்கு நேரக்கூடாது. அந்தப் பெண்ணுக்கு விரைவாக நீதி வழங்கிட வேண்டும். ஏன் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நிகழ்கின்றன என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் கண்டறிய வேண்டும்.

இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்காதவரை நாம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது. இதைச் செயல்படுத்த இதுதான் நேரம்''.

இவ்வாறு ஆஷா தேவி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x