Published : 28 Nov 2019 07:22 PM
Last Updated : 28 Nov 2019 07:22 PM
மகாராஷ்டிர மாநிலத்தின் 18-வது முதல்வராக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் கடந்த 36 நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறி இன்று முடிவுக்கு வந்தது.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற பின், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல், சந்திரகாந்த் பூஜ்பால், காங்கிரஸ் சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனா, பாஜக இடையே சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற பிரச்சினையால் கூட்டணி உடைந்தது. இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப் பட்டது.
இதனிடையே அங்கு திடீர் திருப்பமாக என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக அஜித் பவாரும், பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே பாஜக தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணியின் சார்பில் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
ஆளுநர் கோஷ்யாரி அழைப்பின் பேரில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் இன்று பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாலிவுட் கலைஞர்கள் உதவியுடன் மிகவும் பிரம்மாண்டமான பதவி ஏற்பு விழா அரங்கு அமைக்கப்பட்டது. மராட்டிய மன்னர் சிவாஜியின் அரசவை போன்ற அரங்கு அமைக்கப்பட்டது.
மாலை 6.40 மணிக்கு மேல் மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏவாக இல்லாமல் முதல்வராக மாநிலத்தில் பதவி ஏற்கும் 8-வது முதல்வர் உத்தவ் தாக்கரே ஆவார். அதுமட்டுமல்லாமல் சிவசேனாவில் இருந்து முதல்வராக வரும் 3-வது நபர் ஆவார். இதற்கு முன் நாராயண் ரானே, மனோகர் ஜோஷி ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர்.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற பின், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல், சந்திரகாந்த் பூஜ்பால், காங்கிரஸ் சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, அகமது படேல், எம்என்எஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல், சஞ்சய் ராவத், உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், போலீஸார் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர்.
இதுதவிர மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 விவசாயிகள், வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் விதவை மனைவிகள் உள்பட 500 முதல் 700 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT