Published : 27 Nov 2019 08:32 PM
Last Updated : 27 Nov 2019 08:32 PM
மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறைந்தபட்சம் 20 விவசாயிகள், வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் விதவை மனைவிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் கடந்த 30 நாட்களாக இழுபறியிலிருந்த அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கொண்ட மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மாநிலத்தின் 18-வது முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6.30 மணிக்குப் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.
இந்தப் பதவி ஏற்பு விழாவுக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன
அதேபோல, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதிகள், போலீஸார் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 விவசாயிகள், வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் விதவை மனைவிகள் உள்பட 500 முதல் 700 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT