Published : 27 Nov 2019 04:05 PM
Last Updated : 27 Nov 2019 04:05 PM
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.83 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன என்று மக்களவையில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய அரசில் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதில் 2018, மார்ச் 1-ம் தேதி வரை 31 லட்சத்து 18 ஆயிரத்து 956 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 6 லட்சத்து 83 ஆயிரத்துப் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கின்றன. அவை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணி என்பது தொடர்ந்து நடப்பதாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு துறையில் காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்பும்போது, அதே துறையில் மீண்டும் காலியிடம் உருவாகி விடுகிறது.
அதேசமயம் ஒரு துறையில் ஒரு பணியிடம் தொடர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்தால், அந்தப் பணியிடம் நீக்கப்படும். அந்தப் பணியிடத்தை நீக்கும் முன் உரிய ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டு நீக்கப்படும். ஆனால் ரயில்வே துறையில் அதுபோன்ற முறை ஏதும் இல்லை
2019-20 ஆம் ஆண்டில் பணியாள் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 338 காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கிவிட்டது.
2017-18 ஆம் ஆண்டு மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை மூலம் ரயில்வே துறையில் சி பிரிவு பணியிடங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 573 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டன. இந்த 2 ஆண்டுகள் இடைவெளியில் புதிய காலியிடங்கள் உருவாகிவிட்டன.
இது தவிர்த்து 2018-19 ஆம் ஆண்டில் சி மற்றும் லெவல் 1 பிரிவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 138 இடங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்பவும் அறிவிக்கை விடப்பட்டுள்ளது.
தபால் துறையில் உள்ள 19 ஆயிரத்து 522 இடங்களை நிரப்பத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 591 பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது".
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT