Last Updated : 27 Nov, 2019 03:16 PM

5  

Published : 27 Nov 2019 03:16 PM
Last Updated : 27 Nov 2019 03:16 PM

அரசியல் மாற்றத்தின் தொடக்கம்; மகாராஷ்டிராவில் மட்டுமல்ல மத்தியிலும் ஆட்சியைப் பிடிப்போம்: சஞ்சய் ராவத் உறுதி

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

தேசத்தின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் தொடக்கமே மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகா விகாஸ் அகாதியின் ஆட்சி. மகாராஷ்டிராவில் மட்டுமல்ல மத்தியிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பாக ஒருமாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

பாஜக ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிஸ் 4 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி அரசில் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை முதல்வாரகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தேசத்தின் அரசியலில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியைப் பிடித்து, முதல்வராக உத்தவ் தாக்கரே அமர உள்ளார். எதிர்காலத்தில் சிவசேனா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.

நாளை எங்கள் தலைவர் முதல்வராகப் பதவி ஏற்ற பின் என்னால் அடிக்கடி ஊடகங்களைச் சந்திக்க முடியாது. என்னுடைய வழக்கமான பணியான சாம்னாவின் ஆசிரியர் பணிக்குத் திரும்பி விடுவேன்.

நாகரிகம் அல்லாத நடவடிக்கைகளால், முயற்சிகளால் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயன்றது. ஆனால், மக்கள் அதை முறியடித்து விட்டார்கள். மாற்றம் மகாராஷ்டிராவில் இருந்து தொடங்கி இருக்கிறது. தேசத்துக்குப் புதிய விடியலை வெளிக்காட்டி இருக்கிறது.

சிவசேனாவின் சூர்யோதயம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பாக உதிக்கும். முதல்வர் பதவியில் சிவசேனா அமரும் என்று நான் கூறியபோது மக்கள் அதை நம்பவில்லை. ஆனால், எங்களுடைய சூர்யோதயம் பாதுகாப்பாக தலைமைச் செயலகத்தில் உதித்துள்ளது. அப்படி இருக்கும்போது, மத்தியிலும் சிவசேனா ஆட்சி அமைக்கக் கூடாதா?

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி தங்கள் பொறுப்பை உணர்ந்து, மக்களுக்கான பணியில் ஈடுபடும். நாளை நடக்கும் பதவி ஏற்பு விழாவில் என்னுடைய பங்களிப்பு குறைவுதான். நாளை பற்றி நான் அதிகம் கூற மாட்டேன். அனைத்து முடிவுகளையும் முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார்.

நான் எப்போதுமே சிவசேனாவின் தொண்டனாகவும், போராளியாகவும் இருக்கவே ஆசைப்படுகிறேன். சாணக்கியராக இருக்க விரும்பவில்லை''.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x