Last Updated : 27 Nov, 2019 02:44 PM

 

Published : 27 Nov 2019 02:44 PM
Last Updated : 27 Nov 2019 02:44 PM

கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 41 பெண்கள் தரையில் உறங்கும் அவலம்: ம.பி. மருத்துவமனைக்கு எதிர்ப்பு

கருத்தடை சிகிச்சைபெற்றவர்கள் தரையில் படுத்துறங்கினர் | படம்: ஏஎன்ஐ

விதிஷா (மத்திய பிரதேசம்)

மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 41 பெண்கள், சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் தரையில் தூங்க வைக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கியராஸ்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நடந்துள்ளது. இது பின்னர் ஊடகங்களில் செய்தியாகப் பரவியது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கியராஸ்பூர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிட்டத்தட்ட 41 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவர்கள் ஓய்வெடுக்க, தகுந்த கட்டில்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் கியராஸ்பூர் மருத்துவமனையில் நடந்ததே வேறு.

அவர்கள் அனைவரையும் அங்குள்ள வராந்தாவில் வரிசையாக தரையில் படுக்க வைத்து தூங்க வைத்துள்ளனர்.

இது ஊடக வெளிச்சத்திற்குப் பிறகு பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.சி. சர்மா ஊடகங்களிடம் பேசினார். இந்தச் சம்பவத்தில் விசாரணை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

விடிஷா தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி சி.எம்.எச்.ஓ டாக்டர் அஹிர்வார் கூறுகையில், ''எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முழுமையான விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

கமல்நாத் தலைமையிலான அரசை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ ராமேஸ்வர் சர்மா கூறுகையில், ''ஒரு சாதாரண ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கூட அடிப்படை வசதிகள் இல்லை என்பது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது ஒன்று. மாநில அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு எந்த ஏற்பாடுகளும் செய்யாமலேயே மெத்தனமாக இருந்து வருகிறது. இதன் மூலம் இந்த அரசாங்கம் மாநில மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x