Published : 27 Nov 2019 01:07 PM
Last Updated : 27 Nov 2019 01:07 PM
குடியரசுத் தலைவர் அலுவலகத்தை அதிகாலை 4 மணிக்கு எழுப்பி, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கியது அந்த அலுவலகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.
அதேசமயம் மகாராஷ்டிராவில் புதிதாக உருவாக உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு வாழ்த்தும், அறிவுரையும் சிதம்பரம் வழங்கியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 99 நாட்களாக திஹார் சிறையில் உள்ளார். சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்ற சிதம்பரம், அமலாக்கப் பிரிவின் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளார்.
திஹார் சிறையில் இருந்தவாறே சிதம்பரம் ட்விட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் " 2019 அரசியலமைப்புச் சட்ட நாளில் நவம்பர் 23-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு இடையே நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறை மீறல்தான் நம்முடைய நினைவில் இருக்கும்.
அதிகாலை 4 மணிக்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தை எழுப்பி, மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி கையொப்பமிடக் கூறி நீக்கப்பட்டுள்ளது. இது குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மீதான தாக்குதல். காலை 9 மணி வரை உங்களால் ஏன் காத்திருக்க முடியாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் மகாராஷ்டிராவில் புதிதாகப் பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணிக்கு அரசுக்கு வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளைச் சிதம்பரம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் சிதம்பரம் கூறுகையில், "தயவுசெய்து உங்களின் கூட்டணிக் கட்சிகளின் நலன்களைப் பரிசீலியுங்கள்.. ஒன்றாகப் பணியாற்றி 3 கட்சிகளின் பொதுவான நலன்களை நடைமுறைப்படுத்துங்கள். விவசாயிகள் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் நலன் ஆகியவற்றின் மீது அக்கறை செலுத்துங்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள் அதன் சிக்கலான, வேறுபட்ட, பலதரப்பட்ட சமூகங்களைக் குறைந்தபட்ச செயல்திட்டம் மூலம் சமரசம் செய்து உடன்படும் கூட்டணிகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT