Published : 26 Nov 2019 03:13 PM
Last Updated : 26 Nov 2019 03:13 PM
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் கோஷியாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில் " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதுபற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில் பட்னாவிஸ் முன்கூட்டியே ராஜினாமா செய்வது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT