Published : 26 Nov 2019 02:21 PM
Last Updated : 26 Nov 2019 02:21 PM
அரசியலமைப்பின் உயர்ந்த மதிப்புகளை ஆட்சியில் இருப்பவர்கள் தந்திரமாக மீற முயல்கிறார்கள் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு 70-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம், அதில் மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " இன்று அரசியலமைப்புச் சட்ட நாள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலமைப்புச்சட்டத்தின் உயர்ந்த மதிப்புகளை மீறி, பணபலத்தால் ஜனநாயகத்தில் மக்களின் சக்தியை வலுவிழக்கச் செய்கிறார்கள்.
ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராடி வருவதால், அரசியலமைப்புச் சட்ட நாளை பெரிதாகக் கொண்டாட முடியவில்லை.
ஆனால், பாபா சாஹேப் அம்பேத்கர் சிலைக்குக் கீழ் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுசேர்வதைக் காட்டிலும் அரசியலமைப்புச் சட்ட நாளில் இதைக் காட்டிலும் மிகப்பெரிய கொண்டாட்டம் வேறு என்ன இருக்க முடியுமா" எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்ட நாள் குறித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறுகையில், "இந்த பணபலம் மற்றும் உடல் பலத்தை எதிர்கொள்ள, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் தலைவணங்குவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் ஒவ்வொரு மதிப்புகளுக்கும் நாம் துணைநிற்க உறுதி ஏற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT