Published : 26 Nov 2019 10:38 AM
Last Updated : 26 Nov 2019 10:38 AM
அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தாங்களும் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக சிவசேனா எம்.பி.க்கள் சோனியா காந்தியை நேற்று இரவு சந்தித்துப் பேசினார்கள்.
மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் மாற்றம் காரணமாக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன. கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்த்திசையில் பயணித்து அரசியல் செய்துவரும் காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒரே பாதையில் இணைவது அரிதானதாகும். அதிலும் சோனியா காந்தியை, சிவசேனா எம்.பி.க்கள் சந்தித்துப் பேசுவது அரிதான நிகழ்வாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அரசியலமைப்புச் சட்ட நாளை மத்திய அரசு இன்று கொண்டாடுகிறது. இதற்காக நாடாளுமன்றத்தின் மைய அவையில் இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சேர்ந்து பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம், அங்கு ஆளுநரின் செயல்பாடுகள், மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கின.
இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தையும் புறக்கணிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியுடன், இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், என்சிபி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், திமுக ஆகிய கட்சிகளும் கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இன்று காலை நாடாளுமன்ற அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க சிவசேனாவும் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரின் இல்லத்தில் இதுதொடர்பாக நேற்று இரவு சிவசேனா எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், ராகுல் ஷெவாலே, அணில் தேசாய், கஞ்சனன் கிரித்திகர் ஆகியோர் சென்று சந்தித்தனர். அப்போது தாங்களும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டுக் குழு புறக்கணிப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்புக்குப்பின் கஞ்சனன் கிரித்திகர் நிருபர்களிடம் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் நாங்களும் பங்கேற்கமாட்டோம். எங்களின் விருப்பத்தை சோனியா காந்தியைச் சந்தித்து தெரிவித்தோம்.
மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தை மத்திய அரசு கொலை செய்துவிட்டது. எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவின் உத்தரவுப்படி, அரசியலமைப்புச் சட்ட நாளில் கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT