Published : 25 Nov 2019 04:06 PM
Last Updated : 25 Nov 2019 04:06 PM
கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, செயலாக்கம் ஆகியவை தொடர்ந்து தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில் முல்லைப் பெரியாறு அணை குறித்த கேள்விக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்த போது, "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் தலைமைப் பொறியாளர் தமிழகம், கேரள அரசின் இரு உறுப்பினர்கள் என் 3 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டார்கள். அணைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தியுள்ளார்கள். நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கருவிகளின் செயல்பாடு, வளைவுப் பகுதி, நீர் வருகை கணக்கீடு முறை ஆகியவை குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்புக்குப் பின் அமைச்சர் ஷெகாவத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " கேரள மாநிலத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, செயலாக்கம் ஆகியவை தொடர்ந்து தமிழக அரசு வசமே இருக்கும். அணைப் பாதுகாப்பு மசோதாவில் ஏற்கெனவே இருக்கும் விஷயங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது.
அதாவது அணையின் உரிமையாளர் விஷயத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது. ஆதலால், முல்லைப் பெரியாறு அணையின் செயலாக்கம், பராமரிப்பு, நீர் உரிமை ஆகியவை தமிழக வசமே இருக்கும். அதேசமயம், கேரள அரசின் அணைப் பாதுகாப்பு அமைப்புக்கு முல்லைப் பெரியாறு அணையையோ அல்லது தமிழகத்தில் உள்ள எந்த நீர்த்தேக்கத்தையோ உரிமை கொண்டாட உரிமை இல்லை என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT