Published : 25 Nov 2019 03:01 PM
Last Updated : 25 Nov 2019 03:01 PM
மேற்கு வங்க மாநிலத்தின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவருக்கு பிரச்சார வியூகம் அமைக்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் சவாலாக அமைந்துள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் இந்த மூன்றில் கரீம்பூர் தொகுதியில் மட்டும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற இரண்டில் கடக்பூரில் பாஜகவும், கலியாகன்சில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் வியூகம் அமைப்பவர் பிரஷாந்த் கிஷோர். இவர் முதன்முறையாக 2014 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திர மோடிக்காகப் பணியாற்றி இருந்தார்.
இதையடுத்து பிரபலமானவரை கடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் பயன்படுத்தினார். பிறகு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பலன் பெற்றது.
இந்நிலையில், இந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா கட்சிக்காக பிரஷாந்த் பிரச்சார வியூகம் அமைத்திருந்தார். இதில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனினும், பிரஷாந்தையே அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரச்சார வியூகம் அமைக்க மம்தா நியமித்துள்ளார். இந்த சூழலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரஷாந்தின் குழு பணியாற்றி வருகிறது.
இதில் கிடைக்கும் வெற்றி அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதைச் சவாலாக ஏற்று பிரஷாந்தின் குழுவினர் 3 தொகுதி இடைத்தேர்தலுக்காகப் பணியாற்றுகின்றனர்.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸின் கரீம்பூர் வேட்பாளரான பீமாலாந்து சின்ஹா ராய் கூறும்போது, ''இந்தத் தேர்தலில் நடைபெற்றதைப் போன்ற பிரச்சாரம் நாங்கள் இதுவரை கண்டதில்லை. மிகவும் வித்தியாசமாக பொதுமக்களை நேரடியாகச் சென்று சந்திக்கும் உத்திகளுடன் அமைந்தது பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த 3 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது. நவம்பர் 28-ல் முடிவுகள் வெளியாகவிருக்கும் இந்தத் தேர்தலுக்காக பிரஷாந்த் குழுவினர் சுமார் 300 பேர் பிரச்சார வியூகம் அமைத்தனர்.
பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் நெருக்கமான நண்பருமான பிரஷாந்த், அவரது கட்சியில் இணைந்து துணைத்தலைவராகவும் உள்ளார். எனினும், பிரஷாந்த் செய்யும் தொழிலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என நிதிஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment