Published : 24 Nov 2019 05:38 PM
Last Updated : 24 Nov 2019 05:38 PM
மகாராஷ்டிராவில் குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சம்பவங்கள் நிகழலாம் எனக் கருதி என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தனியார் பாதுகாப்பு ஏஜென்ஜி மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் பாஜகவுக்கு, என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவு அளித்தார். இதையடுத்து, நேற்று காலை முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்தும் அஜித் பவாரை நீக்கினார்.
இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி எந்த அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரிடம் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை நாளை வழங்க வேண்டும் என்றும், நாளை உத்தரவு பிறப்பிப்போம் என்றும் தெரிவித்தனர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்குக் உத்தரவிட்டால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களில் பாஜக ஈடுபட வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் அச்சம் கொள்கின்றன
தற்போது பாஜகவின் பலம் 105 ஆகவும், சுயேட்சைகள், இதர சிறிய கட்சிகள் எனச் சேர்த்தால் 125 எம்எல்ஏக்களுக்கு மேல் இருப்பது கடினம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏக்கள் தேவை.
இதனால், என்சிபி, காங்கிரஸ், சிவசேனா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவோ அல்லது கட்சியை உடைக்கவோ வாய்ப்புள்ள சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக, சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பொருட்டு தனித்தனி சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளார்கள்.
மும்பை ஜூஹூ கடற்கரைப் பகுதியில் உள்ள ஜே.டபிள்யு மாரியட் ஹோட்டலில் தங்கள் எம்எல்ஏக்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சி தங்கவைத்துள்ளது. உண்மையில் காங்கிரஸ் கட்சி தங்கள் எம்எல்ஏக்கள் அனைவரையும் விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்ல நேற்று திட்டம் வகுத்தது.
ஆனால், மகாராஷ்டிரா அரசியல் சூழலில் திடீரென எம்எல்ஏக்களை ஆளுநர் முன் அழைத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்பதால், மும்பையிலேயே தங்கவைத்துள்ளது.
சிவசேனா கட்சி மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் அருகே இருக்கம் தி லலித் ஹோட்டலில் தங்கள் எம்எல்ஏக்கள் அனைவரையும் தங்கவைத்துள்ளது.
என்சிபி கட்சி, போவாய் பகுதியில் உள்ள தி ரீனையசன்ஸ் ஹோட்டலில் அனைத்து எம்எல்ஏக்களையும் தங்கவைத்துள்ளனர். இந்த மூன்று ஹோட்டல்களுக்கும் துணைஆணையர் மஞ்சுநாத் சிங்கே தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மூன்று ஹோட்டல்களிலும் எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் தனியார் செக்யூரிட்டிகள் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT