Last Updated : 24 Nov, 2019 12:24 PM

 

Published : 24 Nov 2019 12:24 PM
Last Updated : 24 Nov 2019 12:24 PM

அஜித் பவார் பக்கம் சென்ற எம்எல்ஏ மீண்டும் என்சிபிக்கு திரும்பினார்; சரத்பவாருடன் பாஜக எம்.பி. சந்திப்பு

பாஜகவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் பக்கம் சென்ற எம்எல்ஏ அனில் பாட்டீல் இன்று காலை மீண்டும் என்சிபி கட்சியில் வந்து இணைந்து கட்சித் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலை என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை அஜித் பவாருக்கு நெருக்கமான எம்எல்ஏக்கள் எனச் சொல்லப்படும் ஜெயந்த் பாட்டீல்,சாகன் பூஜ்பால், பாபன் ஷின்டே ஆகியோர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்கள்.

மேலும் சரத் பவாரை பாஜக எம்பி சஞ்சய் காக்கடேவும் தனிப்பட்ட முறையில் சந்தித்துவிட்டுச் சென்றார். இது கட்சி ரீதியிலான சந்திப்பு அல்ல, தனிப்பட்ட ரீதியிலான சந்திப்பு என்று காக்கடே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், மூத்த தலைவருமான அசோக் சவானும், இன்று காலை சரத் பவாரைச் சந்தித்தார். இருவரும் ஏறக்குறைய 15 நிமிடங்கள் வரை பேசினார்கள். அதன்பின் அசோக் சவான் நிருபர்களிடம் பேசுகையில், " சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதற்குரிய எண்ணிக்கை எங்களிடம் இருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அஜித் பவாருடன் இருந்த என்சிபி எம்எல்ஏ அனில் பாட்டீல், இன்று என்சிபி தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

என்சிபி கட்சயின் எம்எல்ஏ அனில் பாட்டீல் ட்விட்டரில் கூறுகையில் " ஆளுநர் மாளிகையில் நேற்று காலை என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அஜித்பவார் அழைத்ததால் நான் சென்றேன். ஆனால், மீண்டும் சொல்கிறேன் நான் சரத்பவாருடன்தான் இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்

என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், " ஆளுநர் மாளிகைக்கு நேற்று காலை சென்ற ஷாப்பூர் எம்எல்ஏ தவுலத் தரோதா திடீரென காணவில்லை. அவர் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளோம்.
கல்வான் தொகுதி எம்எல்ஏ நிதின் பவார், தின்தோரி எம்எல்ஏ நர்ஹாரி ஹிர்வால், அஹமத்பூர் எம்எல்ஏ பாபாசாஹேப் பாட்டீல், அமல்நகர் எம்எல்ஏ அனில் பாட்டீல் ஆகியோரையும் காணவில்லை. காணமல் போன பாபாசாஹப் பாட்டீல் விரைவில் எங்களிடம் திரும்பிவருவார் என்று அனில் பாட்டீல் தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x