Published : 23 Nov 2019 04:47 PM
Last Updated : 23 Nov 2019 04:47 PM
‘மாற்றுத்தாய் கட்டுப்பாடு மசோதா’ வாடகைத்தாய்கள், மாற்றுத்தாய் அமர்த்தும் தம்பதி, பிறக்கும் குழந்தைக்கான சட்ட உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்பேரில், ஆய்வு செய்திட தேர்வுக் குழுவினை மத்திய அரசு அமைத்தது.
இதுகுறித்து மாநிலங்கவையில் திமுக உறுப்பினர் வில்சன் பேசியதாவது:
“திமுக இந்த மசோதாவை தற்போதைய வடிவத்தில் எதிர்க்கிறது. இம்மசோதாவை தேர்வுக் குழு (Selection Committee) அனுப்பிட வேண்டும். இதுகுறித்து, அமைச்சரிடம் சில விளக்கங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
இம்மசோதா செயல்படுத்தும் முன்பாகவோ, செயல்படுத்திட எத்தனிக்கும்போதோ, இந்த மாற்றுத்தாய் முறையினால் பிறந்த குழந்தைகளின் நிலை என்ன? பெற்றுக் கொடுத்த தாய்மார்களின் நிலை என்ன?
அத்துடன், பெற்றுக் கொடுத்த மாற்றுத் தாய்களுக்கும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் களங்கம் கற்பிக்கப்படும், அதுமட்டுமல்லாமல், மாற்றுத்தாயினால் பிறந்த அனைத்து குழந்தைகளும் இம்மசோதாவின்படி அனாதைகள் ஆக்கப்படுவார்கள், இம்மசோதா சட்டமாக்குவதற்கு முன்பு ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை, குற்றச் செயல்களாக கருதப்படும் சூழ்நிலை ஏற்படும்.
இம்மசோதா, மரபணு மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்கள் மட்டுமே மாற்றுத் தாய்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இது எந்தவிதத்தில் நியாயம்? பகுத்து ஆய்ந்தாமல், ஒருதலைப்பட்சமாக, விசித்திரமான வழிமுறையில் இம்மசோதா இயற்றப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
இம்மசோதா வகுப்புவாதம், இனவாதம், பிரிவினைவாதத்தை உருவாக்கிடும் வகையில் அமைந்துள்ளது. இம்மசோதா கொண்டு வருவதால், வீரியமிக்க குழந்தைகள் சமுதாயத்தில் உருவாக்கிட முடியாத நிலை ஏற்படும். கணவன், மனைவி குடும்பத்தில் மரபணுப் பிரச்சினை இருந்தால், இம்மசோதா அக்குடும்பத்திற்கு எவ்விதத்திலும் உதவாது. இம்மசோதா மாற்றுத் தாய்களைத் தேர்வு செய்திட குழந்தை வேண்டுமென்ற தம்பதியினர்க்குத் தடை விதிக்கிறது.
இம்மசோதா, குறிப்பிட்டவர்களே மாற்றுத்தாயாக இருந்திட வேண்டும் என்று சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. குழந்தை வேண்டுமென்ற தம்பதியினர் மட்டுமே மாற்றுத்தாய் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றவர்கள் ஆவார்கள். மாற்றுத்தாய், பேறு காலத்திற்கு முன்பும், பின்பும் பெறவேண்டிய பயன்கள், இழப்பீடு, விடுப்பு போன்றவை குறித்து இம்மசோதாவில் தெளிவுபடுத்தப்படவில்லை.
இம்மசோதாவில் கருக்கலைப்பு செய்வதற்கு, உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து, 90 நாட்களுக்குப் பிறகு, மனு மீது அனுமதி பெற்ற பின்புதான், கருக்கலைப்பு செய்ய முடியும் என்று கூறுகிறது. 90 நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால், அந்த மாற்றுத்தாயின் நிலைமை என்ன ஆகும்? மேலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மாற்றுத்தாயாக ஒருவரை அமர்த்திட முடியும் என்று சொல்வது இம்மசோதாவின் குறிக்கோளை நிறைவேற்றாது. மனைவிக்கு 23 வயது என்றும், கணவருக்கு 26 வயது இருக்க வேண்டும் என்று வயது வரம்பைக் குறிப்பிட்டிருப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. இது நியாயமற்றது.
திருமணமான தம்பதிக்கு, திருமணமான உடனே குழந்தை பிறக்காது என்று அறிந்த உடன், இம்மசோதாவின் வாயிலாக மாற்றுத்தாய் அமர்த்தி, குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இம்மசோதா நடைமுறைப்படுத்திய பின்தான், மாற்றுத்தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே, சட்ட அங்கீகாரம், சொத்துரிமை, வாரிசு உரிமை ஆகிய உரிமைகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளதால், இம்மசோதாவிற்கு முன்பு பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
சிலபல சூழ்நிலைகளில் திருமணமான தம்பதியரில் ஒருவர் உயிரிழந்துவிட்டால், மற்றொருவர் மாற்றந்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று இம்மசோதா அனுமதி அளிக்காமல் இருப்பது நியாயமற்றது.
இம்மசோதா நடைமுறைக்கு வந்த பின்பு, இம்மசோதாவின் முறைப்படி, “மாற்றந்தாய் மூலம் பிறக்காமல் இருக்கும் குழந்தை, மாற்றந்தாய் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள்மீது கிரிமினல் சட்டம் பாயும்” என்றும், அதன்படி “பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்” என்று இம்மசோதாவின் மூலம் ஒரு கொலைக் குற்றம் போல தண்டனை அளிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இம்மசோதாவை தேர்வுக் குழு (Selection Committee) அனுப்பிட வேண்டும்”.
இவ்வாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் இதே கருத்தை வலியுறுத்தி இம்மசோதாவை தேர்வுக் குழு (Selection Committee) அனுப்பி, அதன் பிறகு சட்டமாக்கிட வேண்டுமென வலியுறுத்திய காரணத்தால், நேற்று (22.11.2019) நாடாளுமன்ற மாநிலங்களவையில், இப்பிரச்சினை குறித்து பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றார்.
“மாற்றுத்தாய் கட்டுப்பாடு” (The Surrogacy (Regulation) Bill) மசோதாவை நிறைவேற்றிட, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, அடங்கிய 23 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு (Selection Committee) அமைக்கப்படுகிறது என்றும், இக்குழு அடுத்த கூட்டத்தொடரின்போது, முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டுமெனவும் ஒரு தீர்மானத்தை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கொண்டு வந்தார்.
அத்தீர்மானத்தை மாநிலங்களவை ஒருமனதாக நிறைவேற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT