Published : 22 Nov 2019 06:33 PM
Last Updated : 22 Nov 2019 06:33 PM
மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்பது ஒருமாதமாக இழுபறியாக இருந்துவரும் நிலையில், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி இன்று இரவு அல்லது நாளை(சனிக்கிழமை) ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என்று என்சிபி தெரிவித்துள்ளது
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மும்பையில் கூடி இறுதி முடிவு எடுக்கின்றனர்.
இதுகுறித்து என்சிபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், " மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் முன்னுரிமை அளிக்கின்றன.மாநிலத்தில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி நடத்துவதே எங்களின் முன்னுரிமையாகும்.
இன்று மாலை 3 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மீண்டும் கூடி மிகமுக்கியமான சில விஷயங்கள் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள். இந்த கூட்டம் முடிந்தபின் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்.
மாநிலத்தில் முதல்வர் பதவி சிவசேனாவுக்குதான் அளிக்கப்படுகிறது. முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் பிரித்துக்கொள்வது குறித்து என்சிபிக்கு திட்டம் ஏதும் இல்லை. அது எங்களுக்கு முக்கியமல்ல. நிலையான ஆட்சி மாநிலத்தில் இருக்க வேண்டும்
நாங்கள் அமைக்கும் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. விரைவில் மாநிலத்தில் புதிய ஆட்சி மலரும் " எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT