Published : 22 Nov 2019 04:50 PM
Last Updated : 22 Nov 2019 04:50 PM
மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் தலைமையில் அமையும் அரசு 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை கூட நிலைக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கணித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி மூன்று கட்சிகளுக்கும் இடையே கடந்த 15 நாட்களாகப் பலகட்டப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த சூழலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மும்பையில் கூடி இறுதி முடிவு எடுக்கின்றனர்.
ராஞ்சி நகருக்கு இன்று வந்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி அமைக்க இருக்கும் ஆட்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கட்கரி கூறுகையில், "சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிஸ் கட்சி சித்தாந்தரீதியாக, கொள்கைரீதியாக மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கவே ஒன்றிணைந்துள்ளார்கள். இது துரதிர்ஷ்ட வசமானது. சந்தர்ப்பவாதமே இந்தக் கூட்டணிக்கு அடித்தளம். இந்தக் கூட்டணி முறையாக ஆட்சி அமைப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அப்படியே சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தாலும், 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் கூட நிலைக்காது" என்று தெரிவித்தார்.
சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி உடைந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க முயலுமா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கட்கரி பதில் அளிக்கையில், "அவ்வாறு ஏதேனும் எதிர்காலத்தில் நடந்தால், அதுகுறித்து பாஜக தலைமைதான் முடிவெடுக்கும். கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சித்தாந்தரீதியாக மிகப்பெரிய அளவில் வேறுபாடுகளைக் கொண்ட 3 கட்சிகளும் எதற்காக இந்தக் கூட்டணியை அமைத்தார்கள் என்ற கவலை இருக்கிறது.
அடிப்படையில் சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி தொடர்புடையது. முழுமையாக இந்துத்துவா சிந்தனையுடையது. முதல்வர் பதவி சுழற்சி முறையில் அளிக்கப்படும் என்று சிவசேனா கூறுவது உண்மையில்லை. நான் விசாரித்துவிட்டேன். எங்களைப் பொறுத்தவரை பாஜகவில் முதல்வர் பதவி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்து நடந்த சம்பவங்கள் எல்லாம் துரதிர்ஷ்டமானது. பாஜகவில் முதல்வர் பதவி என்பது உயர்மட்டக் குழு எடுத்தமுடிவு" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT