Published : 22 Nov 2019 04:32 PM
Last Updated : 22 Nov 2019 04:32 PM
அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுக்க உள்ளனர், இதனால், ராமர் கோயில் கட்டுவது மீண்டும் தாமதமாகும் அபாயம் இருப்பதாக மத்திய அரசிற்கு பிரவீன் பாய் தொகாடியா எச்சரித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின் சுமார் 70 ஆண்டுகளாக அயோத்தி நிலப்பிரச்சனை மீதான நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த- 9 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களிடம் ஒப்ப்டைததுடன், முஸ்லிம்களுக்காக 5 ஏக்கர் வேறு இடத்தில் மசூதி கட்ட அளிக்கவும் அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்க முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சீராய்வு மனுவால் ராமர் கோயில் கட்டுவது மீண்டும் தாமதமாகும் விடும் என டாக்டர் பிரவீன்பாய் தொகாடியா எச்சரித்துள்ளார். விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் பொதுச்செயலாளரான அவர் தற்போது, சர்வதேச இந்து கவுன்சில் எனும் பெயரில் ஒரு இந்து அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார்.
இது குறித்து பிரவீன் பாய் தொகாடியா கூறும்போது, ‘‘சீராய்வு மனுவால் ராமர் கோயில் கட்டுவது மீண்டும் தாமதமாகும் நிலை ஏற்பட்டு விடும். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சட்டம் இயற்ற வேண்டும். இதேபோல் சட்டம் இயற்றியே குஜராத்தில் இடிக்கப்பட்ட சோம்நாத் கோயிலும் கட்டப்பட்டது.
முஸ்லிம் தரப்பினரால் சீராய்வு மனு அனுமதிக்கப்பட்டால் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு இடைக்காலத் தடை உருவாக வாய்ப்புள்ளது. இதன் பிறகு மறுசீராய்வு மனு அளிக்கவும் மற்றொரு வாய்ப்பு முஸ்லிம் தரப்பினரிடம் உள்ளது.
எனவே, ராமர் கோயில் கட்டும் பணியை உடனடியாகத் துவக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்பும் மத்திய அரசு அமைதி காப்பது சரியல்ல.’’எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மீது ராம்விலாஸ் வேதாந்தி புகார்
இதனிடையே, ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸின் நிர்வாகக் குழு உறுப்பினரும் பாஜகவின் முன்னாள் எம்.பி.யுமான சாது ராம்விலாஸ் வேதாந்தி, சீராய்வு மனு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அயோத்தி செய்தியாளர்களிடம் சாது வேதாந்தி கூறும்போது, ‘‘அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தை சீராய்வு மனு அளிக்கும்படி காங்கிரஸ் தூண்டுகிறது. குறிப்பாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கபில்சிபல் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் இந்த வேலையை செய்து வருகின்றனர்.’’ எனத் தெரிவித்தார்.
இப்பிரச்சனையில் சாது வேதாந்தி மேலும் கூறுகையில், ‘‘சீராய்வு மனு தள்ளுபடியாகி விடும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிறகு பிரதமர் நரேந்திர மோடி சட்டம் இயற்றி ராமர் கோயில் கட்டும் பாதையை அமைப்பார்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT