Last Updated : 22 Nov, 2019 04:30 PM

 

Published : 22 Nov 2019 04:30 PM
Last Updated : 22 Nov 2019 04:30 PM

முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்தா? எஸ்பிஜி திருத்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் தாக்கல்

கோப்புப்படம்

புதுடெல்லி

முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்பால் இன்று மக்களவையில் அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பைக் கடந்த இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசு ரத்து செய்தது. அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் பிரிவின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை நடந்து சில வாரங்களில் இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எஸ்பிஜி சட்டத்தின்படி, பிரதமருக்கும், அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமராக இருந்தால், அவர் பதவியில் இருந்து இறங்கிய ஒரு ஆண்டுக்கு அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். ஒருவேளை ஒரு ஆண்டுக்குப் பின்பும், முன்னாள் பிரதமரின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அவருக்குத் தொடர்ந்து எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.

ஆனால், தற்போது எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின்படி, முன்னாள் பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் எஸ்பிஜி பாதுகாப்பின் கீழ் வரமாட்டார்கள். அவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்க இயலாது என்பதாகும். இந்த சட்டத் திருத்தத்திற்கு கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட எஸ்பிஜி திருத்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என மத்திய அமைச்சர் மேக்வால் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள், பிரதமரின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.

வாஜ்பாய் அரசு கொண்டுவந்த திருத்தத்தின்படி, ஒரு பிரதமர் ஆட்சியில் இருந்து சென்ற பின், முதலாம் ஆண்டுக்குப் பின், ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து பாதுகாப்பை மத்திய அரசு முடிவு செய்யலாம். 10-வது ஆண்டில் இருந்து பாதுகாப்பு குறைக்கப்படும் எனத் திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே 4 ஆயிரம் பேர் கொண்ட எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி எஸ்பிஜி பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன வாகனங்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், செல்போன் ஜாமர்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x