Published : 22 Nov 2019 02:02 PM
Last Updated : 22 Nov 2019 02:02 PM
அயோத்தி தீர்ப்பில் மற்ற நாடுகள் ஆட்சேபனை எதையும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்தத் தீர்ப்பில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்தியா மற்ற நாடுகளுக்கு திருப்திகரமாக விளக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஈடுபடுவது பெரும்பாலும் வெற்றிகரமாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:
"இந்தியாவில் ஏதேனும் முக்கியமான மாற்றங்கள், முக்கியமான புதிய செய்திகள் ராஜாங்க அளவில் பகிர்ந்துகொள்ளக்கூடியது ஏதாவது இருந்தால் அது குறித்து நாம் மற்ற நாடுகளுக்குத் தெரிவித்து அவர்களது கருத்தைப் பெற வேண்டும். இதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொறுப்பு முக்கியமானது.
உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பை இந்தியா மற்ற நாடுகளுக்கு திருப்திகரமாக விளக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஈடுபடுவது பெரும்பாலும் வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், டெல்லியில் சில நாடுகளுடன் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் மூலம் இந்தியா வெளிநாடுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பின் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதில் ஈடுபட்டது.
இந்த விவகாரம் அனைவரிடமும் விவாதிக்கப்பட்டபோது, ''இது இந்தியாவின் உள் விஷயம் இது. இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ற வகையில் இதனைப் பார்க்க வேண்டும்'' என்று நாங்கள் வாதிட்டோம்.
எனது இந்தத் தகவல்களின்படி, நாங்கள் அவர்களுக்கு இந்த விஷயத்தைப் போதுமான அளவில் விளக்கவில்லை என்று யோசிக்கும் படியாக எங்கிருந்தும் எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை. அவ்வகையில் எங்கள் மற்ற நாடுகளுடனான எங்கள் விவாதம் பெரும்பாலும் வெற்றிகரமாக அமைந்தது''.
இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT