Last Updated : 22 Nov, 2019 11:16 AM

 

Published : 22 Nov 2019 11:16 AM
Last Updated : 22 Nov 2019 11:16 AM

இந்திரலோக அரியணை அளிக்கிறேன் என்று பாஜக கூறினாலும் அவர்கள் பக்கம் சிவசேனா போகாது: சஞ்சய் ராவத் திட்டவட்டம்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

இந்திரலோகத்தில் கடவுள் தேவேந்திரனின் அரியணையை பாஜக அளிக்கிறேன் என்று கூறினால்கூட இனிமேல் அவர்கள் பக்கம் சிவசேனா செல்லாது. அவர்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக மூன்று கட்சிகளுக்கும் இடையே கடந்த 15 நாட்களாகப் பலகட்டப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த சூழலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மும்பையில் கூடி இறுதி முடிவு எடுக்கின்றனர். இதற்காக மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளார்கள்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே இருவரும், என்சிபி தலைவர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் நேற்று இரவு சென்று சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நடந்துள்ளது. அப்போது கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தான் விளக்கியுள்ளதாக சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்துள்ள இந்தக் கூட்டணிக்கு "மகா விகாஸ் அகாதி"(பெரும் வளர்ச்சிக் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று மும்பையில் நண்பகல் 12 மணிக்கு மேல் மூன்று கட்சி்களும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகின்றன. அதன்பின், மாலை 4 மணிக்கு மேல் மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றன.

இதற்காக சிவசேனா கட்சி தங்களின் எம்எல்ஏக்கள் அனைவரையும் உரிய அடையாள அட்டையுடனும், 5 நாட்களுக்கு உரிய உடையுயனும் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்சிகளைத் தவிர்த்து, சமாஜ்வாதிக் கட்சி, ஸ்வபிமானி சேத்கரி சங்கதனா, பிடபிள்யுபி கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ளன.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் முதல்வர் பதவியை சரிபாதியாக என்சிபியுடன் பிரித்துக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ராவத் பதில் அளிக்கையில் " மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. 5 ஆண்டுகள் முழுமையாக சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வர் பதவியில் இருப்பார். இது குறித்து காங்கிரஸ், என்சிபி கட்சித் தலைமையுடன் பேசி முடிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மக்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

முதல்வர் பதவி சரிசமமாகப் பிரித்துக்கொள்ள பாஜக தற்போது சம்மதம் தெரிவித்து சிவசேனாவை அணுகினால் உங்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராவத் கூறுகையில், "பாஜகவுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இனிமேல் இந்திரலோகத்தில், கடவுள் தேவேந்திரனின் அரியசானத்தை அளிக்கிறோம் என பாஜக கூறினாலும் அவர்களிடம் செல்லமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

எப்போது மூன்று கட்சித் தலைவர்களும் சேர்ந்து ஆளுநரைச் சந்திக்கப்போகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு சஞ்சய் ராவத் பதில் அளிக்கையில், " குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும்போது ஏன் ஆளுநரைச் சந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x