Published : 12 Aug 2015 08:16 AM
Last Updated : 12 Aug 2015 08:16 AM

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு: போக்குவரத்து முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து முடங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநிலப் பிரிவினையின்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றுள்ள நிலையிலும் இதுவரை சிறப்பு அந்தஸ்து குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாறாக மத்திய அமைச்சர்கள் சிலர் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் தீக்குளித்த காங்கிரஸ் தொண்டர் முனி கோட்டி உயிரிழந்தார். இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. திங்கள்கிழமை திருப்பதியில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு மற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பதியை தவிர மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. திருப்பதியிலும் தமிழகம், கர்நாடகத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. வங்கிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்படவில்லை. பெட்ரோல் பங்க்குகளும் மாலை வரை இயங்கவில்லை. திரையரங்குகளில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மாநிலம் முழுவதும் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசு உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். வெளி மாநில லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

‘வெங்கய்ய நாயுடுவை அனுமதிக்க மாட்டோம்’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலப் பிரிவினையின்போது மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. குறிப்பாக இப்போதைய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியே தீர வேண்டுமென மக்களவையில் அப்போது கடுமையாக வாதாடினார்.

ஆனால் இப்போது இதுவிஷயத்தில் இவரும், பிரதமரும் மவுனம் சாதிக்கின்றனர். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சிறப்பு அந்தஸ்துக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வெங்கய்ய நாயுடுவை ஆந்திராவில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு நாராயணா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x