Published : 21 Nov 2019 11:59 AM
Last Updated : 21 Nov 2019 11:59 AM
மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இவர் மீதான வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைவிடுவதாக தேசிய புலனாய்வு மையம் 2015-ம் ஆண்டு தெரிவித்தது. ஆனால், விசாரணை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
குண்டுவெடிப்புக்கு சாத்வியின் இருசக்கர வாகனமே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த பிரக்யா சிங் தாக்கூர், மத்தியப் பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு எம்.பி.யாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழு கடந்த மாதம் 21-ம் தேதி அமைக்கப்பட்டது. 21 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், திமுக எம்.பி. ஆ.ராசா, என்சிபி தலைவர் சரத் பவார், பாஜக சார்பில் பல்வேறு எம்.பி.க்களும், போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் நியமிக்கப்பட்டுள்ளார்
மக்களவைத் தேர்தலின் போது சாத்வி பிரக்யா பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கலில் சிக்கினார். குறிப்பாக மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேசபக்தர் என்று தெரிவித்தார். பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பை தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அவரின் பாவம்தான் காரணம் என்றும் பிரக்யா பேசியது சர்ச்சைக்குள்ளானது கவனிக்கத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...