Published : 18 Aug 2015 02:07 PM
Last Updated : 18 Aug 2015 02:07 PM
பிஹார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.1.25 லட்சம் கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
அராவில் செவ்வாயன்று பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் திறன் வளர்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்த பிரதமர் மோடி, 'பிஹாரின் விதியை மாற்றும்' ரூ.1.25 லட்சம் கோடி நிதியுதவியை அறிவித்தார்.
இது தவிரவும் ரூ.40,000 கோடிக்கான பிற திட்டங்களுக்கான நிதியுதவியையும் அவர் அறிவித்ததையடுத்து பிஹாருக்கு மொத்தம் ரூ.1,65,000 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
முந்தைய அரசுகள் பிஹாருக்கு நிதியுதவி அளித்ததையும், அதனை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய மோடி, “முந்தைய வாஜ்பாயி அரசு பிஹார் வளர்ச்சிக்காக ரூ.10,000 கோடி அளித்தது. ஆனால் 2013-ம் ஆண்டு வரை மாநில அரசு ரூ.9,000 கோடி தொகையையே பயன்படுத்தியுள்ளது, ரூ.1000 கோடி செலவிடப்படாமல் உள்ளது.
அதே போல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பிஹாருக்கு ரூ.12,000 கோடி நிதி அளித்தது. ஆனால் ஆச்சரியமென்னவெனில் இன்று வரை இதில் ரூ.4000 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நான் எனது வாக்குறுதியை நிறைவேற்ற வந்துள்ளேன், நான் ரூ.50,000 கோடி பிஹார் வளர்ச்சி நிதிக்கு ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தேன், ஆனால் இன்று அதற்கும் மேலான தொகை இங்கு தேவைப்படுவதை உணர்ந்துள்ளேன்.
முன்பு நான் பிஹாரை, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேச மாநிலங்கள் வரிசையில் வளர்ச்சி குன்றிய மாநிலம் என்று ஒப்பிட்டு பேசியதற்கு நிதிஷ் குமார் வருந்தினார், ஆனால் இந்த அடைப்புக்குறியிலிருந்து பிஹார் வெளியே வந்துவிட்டது என்றால், அவர் எதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீட்டு கேட்கிறார்?
வயிறு நிரம்பியவுடன் யாராவது உணவு கேட்பார்களா? ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் மருத்துவரிடம் செல்வாரா?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பின் தங்கிய மாநிலங்கள் நிலையிலிருந்து வெளியே வந்து விட்டன. நாம் இப்போது பிஹாரையும் மீட்க வேண்டும்.
பிஹார் போன்ற கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடையாமல் இந்தியா வளர்ச்சி அடைய முடியாது.” என்று பேசினார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT