Published : 20 Nov 2019 08:53 PM
Last Updated : 20 Nov 2019 08:53 PM
வடசென்னையில் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான மனுவை மக்களவையின் திமுக எம்.பி.யான டாக்டர் கலாநிதி வீராசாமி இன்று மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து அளித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் வடசென்னை தொகுதி எம்.பி.யான டாக்டர் கலாநிதி வீராசாமி அளித்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது;
''வடசென்னையின் ஆர்.கே.நகரின் எழில் நகர் ரயில்வே கேட் அருகே உள்ள மத்திய ரயில்வே துறைக்குச் சொந்தமாக சுமார் பத்து ஏக்கர் இடம் உள்ளது. இதில், வடசென்னை மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் அன்றாடம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுகிறார்கள்.
மழைக்காலங்களில் இந்த மைதானங்கள் முழுவதும் தண்ணீர் நிறைந்து குளம் போல் தேங்கி விடுகிறது. அதன் பிறகு நீர் வடிந்தாலும் மாதக் கணக்கில் சேரும் சகதியுமாக இருந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் விளையாட முடியாமல் தவிக்கிறார்கள்.
எனவே, மேற்கண்ட ரயில்வே துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் மத்திய அரசு மிகப்பெரிய விளையாட்டுத் திடல் அமைத்து எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க வேண்டுகிறோம்..
அதுமட்டுமல்லாமல் வடசென்னையில் உள்ள வியாசர்பாடி, கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற குட்டி பிரேசில் என்று அழைக்கப்படுவது வழக்கம். அவ்வளவு திறமையான இளைஞர்களைக் கொண்டது எங்கள் வடசென்னை தொகுதி. அவர்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து வசதியுடன் கூடிய விளையாட்டுத் திடல் அமைத்துத் தர வேண்டுகிறோம்''.
இவ்வாறு கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT