Published : 20 Nov 2019 07:23 PM
Last Updated : 20 Nov 2019 07:23 PM
பிரதமர் மோடி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை 9 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், உள்ளிட்டவர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்வி மக்களவையில் இன்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
"கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 7 முறை வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்ட பிரதமர் மோடி 9 நாடுகளுக்குச் சென்றுள்ளார். பூட்டான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான டெக்ஸாஸ் இந்தியா நிறுவனம் ஹூஸ்டனில் செப்டம்பர் மாதம் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடத்தியது. அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணித்தபோது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த டெக்ஸாஸ் இந்தியா நிறுவனத்தோடு இந்திய அரசு எந்த விதத்திலும் கூட்டு வைக்கவில்லை. எந்த நிதியுதவியும் வழங்கவில்லை.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 முறை வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளார். இதில் 7 நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரை சென்றுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 6 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 13 வெளிநாட்டுப் பயணங்களில், 16 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இணையமைச்சர் முரளிதரன் 10 வெளிநாட்டுப் பயணங்களில், 16 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.
ஜெர்மன் அதிப்ர ஏஞ்சலா மெர்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங், உள்ளிட்ட 14 முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்கள்".
இவ்வாறு மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT