Published : 20 Nov 2019 01:02 PM
Last Updated : 20 Nov 2019 01:02 PM
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பின. அவையின் மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இந்த இரு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை உரிய முறையில் எழுப்ப வேண்டும், அதனை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும், அதுவரை அவை வழக்கமாக செயல்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்க வேண்டும் என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று இதுகுறித்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை முடங்கியுள்ளதாக கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி வருகிறது. லேண்ட்லைன் போன்கள் மற்றும் மொபைல் போன்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. வாகனங்கள் இயங்கி வருகின்றன. மருத்துவ சேவையும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT