Published : 14 Aug 2015 02:20 PM
Last Updated : 14 Aug 2015 02:20 PM
டெல்லியில் நடைபெற்று வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் முயற்சியை டெல்லி போலீஸ் கைவிட்டது.
ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறுவதால் 24 மணி நேரத்துக்கு மட்டும் போராட்ட களத்தில் இருந்து செல்லுமாறு டெல்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏற்பதாக இல்லை.
இதனையடுத்து டெல்லி போலீஸும் டெல்லி முனிசிபல் நிர்வாகமும் இணைந்து ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆனால், திடீரென அந்தப் பணியை டெல்லி போலீஸார் கைவிட்டனர். "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை இனியும் அப்புறப்படுத்தப் போவதில்லை என்றனர். இது டெல்லி முனிசிபல் நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவே" என டெல்லி போலீஸ் கமிஷனர் விஜய குமார் தெரிவித்தார். ஆனால், எதற்காக போராட்டகாரர்களை அப்புறப்படுத்துவது நிறுத்தப்பட்டது என்பது குறித்து கூறவில்லை.
நாளை அறிவிப்பு?
இதற்கிடையில், நாளை சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கக் கூடும் என்ற காரணத்தினாலேயே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT