Published : 19 Nov 2019 08:33 AM
Last Updated : 19 Nov 2019 08:33 AM

வாகன நிறுத்தத்தில் விடப்பட்ட கார் திருடு போனால் ஓட்டல்தான் பொறுப்பு: மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எம்.சண்முகம்

வாகன நிறுத்தத்தில் விடப்பட்ட கார் திருடு போனால் அதற்கு ஓட்டல் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த 98-ம் ஆண்டு தங்கிய விருந்தினர் ஒருவர் தனது மாருதி ஜென் காரை ‘வேலே பார்க்கிங்’ எனப்படும் சிறப்பு வசதி மூலம் நிறுத்தினார்.

விருந்தினர் காரில் வந்திறங்கியதும் ஓட்டல் ஊழியர் ஒருவர் கார் சாவியை பெற்றுக் கொண்டு காரை வாகன நிறுத்தத்தில் நிறுத்துவார். பிறகு விருந்தினர் புறப்படும்போது, வாகன நிறுத்தத்தில் இருந்து காரை எடுத்து வந்து தருவது ‘வேலே பார்க்கிங்’ வசதியாகும். பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களில் இந்த வசதி உண்டு.

இந்த வழக்கில் தொடர்புடைய விருந்தினர் திரும்பி வந்து காரைக் கேட்டபோது, கார் திருடு போனது தெரியவந்தது. அதே ஓட்டலில் தங்கிய மூன்று இளைஞர்கள் தங்கள் காரை எடுக்கும்போது, அவர்களில் ஒருவர் ஓட்டல் பாதுகாவலரிடம் மாருதி ஜென் காரின் சாவியையும் வாங்கிக் கொண்டு வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று காரை ஓட்டிச் சென்று தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

காரின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தபோது காப்பீட்டு நிறுவனம் அவருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கி விட்டது. இந்த இழப்பீட்டை ஓட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காப்பீட்டு நிறுவனமும் வாகன உரிமையாளரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இழப்பீட்டுத் தொகை அதற்கான 12 சதவீத வட்டி, வழக்குச் செலவு ரூ.50 ஆயிரம், வாகன உரிமையாளர் மன உளைச்சலுக்கான இழப்பீடு ரூ.1 லட்சம் ஆகியவற்றை ஓட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று மாநில ஆணையம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மோகன் எம்.சந்தானகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:‘வேலே பார்க்கிங்’ மூலம் விருந்தினர் ஒருவர் வாகனத்தை ஒப்படைக்கும்போதே, ஓட்டல் நிர்வாகம் தனது வாகனத்தைப் பாதுகாத்து, பத்திரமாக திருப்பி அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒப்படைக்கிறார். ‘வாகனம் திருடு போனால் ஓட்டல் நிர்வாகம் பொறுப்பல்ல’ என்று டோக்கனில் அச்சிடப்பட்டிருப்பது ஓட்டல் நிர்வாகத்தை காப்பாற்ற உதவாது. ஓட்டலில் தங்கும் விருந்தினரின் காரை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்குவதே மறைமுக ஒப்பந்தம் தான். காரை பாதுகாத்து பத்திரமாக திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பில் இருந்து ஓட்டல் நிர்வாகம் தப்பிக்க முடியாது. இந்த வழக்கில் கார் திருடு போனதற்கு ஓட்டல் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஓட்டல் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x