Published : 18 Nov 2019 04:48 PM
Last Updated : 18 Nov 2019 04:48 PM
பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் பிரச்சாரத்திற்கு, பழைய பாலிவுட் பாடல்களையே உல்டா செய்து பாடிவரும் புனேவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் மகாதேவ் ஜாதவ்வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.
நாம் ஒருவர் போடுவதால் என்ன குடியா முழுகிவிடப்போகிறது என்று நினைத்து ஒவ்வொருவரும் போடும் குப்பைகளாலும் சுகாதாரக்கேடு, காற்றுமாசு போன்றவைகள் உருவாகின்றன. சுற்றுச்சூழலை பேணிக்காக்க பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த மாதம் காலை நடைப்பயணத்தின் போது பிரதமர் தானே மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை சேகரித்திருந்ததை நாடே கவனித்தது.
புனே நகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த 57வயது மகாதேவ் ஜாதவ் அதிகாலையில் நேரிலேயே பார்த்திருக்கிறார். இத்தனைக்கும் இதை செய்வது படித்தவர்கள்தானாம். புனே பார்வதிநகர் பகுதியில் சாலைகளில் குப்பைகளைக் கொண்ட பிளாஸ்டிக் பைகளை வீசுவதைக் கண்டார். இதை கண்டிப்புடன் சொல்வதைவிட பாடிக்கொண்டே குப்பை அகற்றும் பணியில் ஈடுபடும்போது மக்கள் நிச்சயம் உணர்வார்கள் என்று அவரே தீர்மானித்துள்ளார். விளைவு.... அவரது பாடல்களை பொதுமக்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவர் பாடிக்கொண்டே சாலைகளில் துப்புரவு செய்வதை பொதுமக்கள் தங்கள் செல்போன் கேமராக்களில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் ஏற்றிவிட அது இப்போது அப்பகுதியெங்கும் ஒரு விழிப்புணர்வு புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. அவரது பாடல்களுக்கு நெட்டிஸன்களிலிருந்து உள்ளூர் சிட்டிசன்கள் வரை ஏராளமான ரசிகர்கள்.
பாடல்வழியே குப்பை மேலாண்மை பிரச்சாரம் செய்யும் மகாதேவ் ஜாதவ்வுக்கு பொதுமக்கள் பாராட்டு
தனது தனித்துவமான பாணியின் மூலம் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் குடியிருப்பு சங்கங்களிலிருந்து தனக்கு அழைப்புகள் வருவதாக ஜாதவ் கூறினார்.
இதுகுறித்து ஜாதவ் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நடைபயிற்சி வெளியே செல்லும் போது சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதைப் பார்த்தேன். அவர்களின் அணுகுமுறையால் கோபமடைந்த நான், பாடுவதன் மூலம் விழிப்புணர்வை உருவாக்க முடிவு செய்தேன்.
'கஜ்ரா மொகாப்பத் வாலா' என்ற கிளாஸிக் இந்திப் பாடலில் ''கேரிபேக்குகள் பயன்படுத்துவது அது நம்மையே கொன்றுவிடும்'' என்ற செய்தியை உள்ளடக்கி பாடினேன். இதேபோல நிறைய பாடல்கள். தற்போது பிஎம்சி கலாச்சார குழுவின் முக்கிய உறுப்பினர், என்னையும் என் கருத்துடன் இணக்கம்கொண்ட என் சகாக்களையும் அழைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீட்டுவசதி சங்கங்களுக்கு அழைத்து மாணவர்கள் மக்கள் மத்தியில் பாட வைக்கிறார்கள். அங்கு அவர்களுக்காக நாங்களும் சிறுநகைச்சுவைகளை செய்து குப்பை மேலாண்மையை பாடலில் இணைத்துவிடுகிறோம்.
இவ்வாறு மகாதேவ் ஜாதவ் தெரிவித்தார்.
புனே நகராட்சி கழகத்தில் கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் ஞானேஷ்வர் மொலக் கூறுகையில், ''ஒரு சமூகப் பிரச்சனையை தனிப்பட்ட மனிதராக இருந்து அவர் நிறைய மாற்றங்களை உருவாக்கியுள்ளார். இது பெருமைக்குரிய விஷயம். குடிமை அமைப்பால் நடத்தப்படவுள்ள மத்திய அரசின் தூய்மை கணக்கெடுப்புக்கான எங்கள் தூய்மை பிராண்ட் தூதராக அவரை நியமிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT