Published : 18 Nov 2019 04:36 PM
Last Updated : 18 Nov 2019 04:36 PM
டெல்லியில் தண்ணீரின் தரம் குறித்து மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை அளிக்கட்டும், அதற்கு தயாரா என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10-ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் தற்போது டெல்லியில் அரசியலாகியுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பேட்டியளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது
‘‘மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறி மக்களிடம் பீதியை கிளப்புகிறார்கள். டெல்லி குடிநீர் குறித்து குடிநீர் வாரியம் ஏற்கெனவே சோதனை செய்துள்ளது. பல பகுதிகளில் உள்ள மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் 1.5 சதவீதம் அளவுக்கே தண்ணீர் மாசு இருப்பதாக தெரிய வந்தது.
இவர்கள் வெறும் 11 மாதிரிகளை வைத்துக் கொண்டு டெல்லி தண்ணீர் பற்றி மக்களிடம் பீதி கிளப்புகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 10 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளை விடவும் இங்கு தண்ணீரின் மோசமானதாக இல்லை. இதனை மத்திய அமைச்சர்களான கஜேந்திர சவுகான், ஹர்ஷ வர்த்தன், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புரிந்து கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் கேஜ்ரிவாலின் புகாருக்கு ராம் விலாஸ் பாஸ்வான் பதிலளித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பேசியதாவது:
டெல்லி குடிநீர் வடிகால் வாரியம் விநியோகித்து வரும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்த ஒன்று அல்ல. வசதிபடைத்தவர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் ஆர்ஓ எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் ஏழைகள் நிலைமை அப்படியல்ல.
ஆம் ஆத்மி கட்சியும், டெல்லி அரசும் டெல்லி தண்ணீரின் தரம் குறித்து வெளியாகியுள்ள ஆய்வறிக்கையை கடுமையாக சாடுகின்றனர். இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.
டெல்லியில் வீட்டு குழாய்களில் வரும் தண்ணீரை அப்படியே குடிக்க முடியாத நிலை தான் உள்ளது. மஞ்சள், நீலம் என பல கலர்களில் தண்ணீர் வருகிறது.
தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய டெல்லி மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்போம். அவர்கள் ஆய்வு செய்து அறிக்கையை அளிக்கட்டும். நான் உங்களுக்கு (கேஜ்ரிவால்) சவால் விடுக்கிறேன்.
அந்த குழுவில் இடம்பெறக்கூடிய டெல்லி அதிகாரிகளின் பெயர்களை இன்றோ அல்லது நாளையோ அறிவியுங்கள். அவர்கள் டெல்லியின் எந்த பகுதிக்கும் செல்லட்டும். எங்கு சென்று வேண்டுமானாலும் மாதிரிகளை திரட்டி வந்து சோதிக்கட்டும். இந்த விவகாரத்தில் கேஜ்ரிவால் தான் அரசியல் செய்கிறார்.’’
இவ்வாறு ராம் விலாஸ் பாஸ்வான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...