Published : 18 Nov 2019 12:10 PM
Last Updated : 18 Nov 2019 12:10 PM
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் கேள்வி நேரத்தில் பொருளாதார சுணக்கம், வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவையில் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கேள்வி நேரத்தில் பங்கேற்று கேள்விகளை முன் வைத்தனர்.
எம்.பி. சுரேஷ் நாராயணன், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது பற்றிய கேள்வியை எழுப்பினர். பிரேமச்சந்திரன், காஷ்மீரில் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
பொதுத்துறை வங்கிகளில், கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்த விவகாரம் தொடர்பாக எம்.பி. அன்னபூர்ணா தேவியும், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக உமேஷ் ஜாதவும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 20 அமர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் நடை பெறவுள்ள 2-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார சுணக்க நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க்கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.
அதேபோல் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தக் கூட்டத் தொடரில் வருமானவரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டம், இ-சிகரெட் விற்பனைக்கு எதிரான சட்டம் ஆகிய 2 அவசரச் சட்டங்களைச் சட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அப்போது முத்தலாக் தடைச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதேபோல், குளிர்காலக் கூட்டத்தொடரையும் மிகவும் ஆக்கப்பூர்வமாகக் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment