Published : 18 Nov 2019 10:45 AM
Last Updated : 18 Nov 2019 10:45 AM
நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 20 அமர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் நடை பெறவுள்ள 2-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார சுணக்க நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க்கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.
அதேபோல் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தக் கூட்டத் தொடரில் வருமானவரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டம், இ-சிகரெட் விற்பனைக்கு எதிரான சட்டம் ஆகிய 2 அவசரச் சட்டங்களைச் சட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அப்போது முத்தலாக் தடைச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதேபோல், குளிர்காலக் கூட்டத்தொடரையும் மிகவும் ஆக்கப்பூர்வமாகக் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் மோடி முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒவ்வாரு உறுப்பினர்களும் சரியான முறையில் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT