Published : 17 Nov 2019 07:04 PM
Last Updated : 17 Nov 2019 07:04 PM
உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்துக்கு தமிழக்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர். பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். 13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி இப்போதுதான் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காலியான இடத்தில் நீதிபதி பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் என்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் மூத்த நீதிபதிகள் 5 பேர் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பாகும். உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்யும்
கொலிஜியத்தில் இதற்கு முன் கடந்த 2006-ம் ஆண்டுவரை ரூமா பால் என்ற பெண் நீதிபதி இருந்தார். அவருக்குப்பின் எந்த பெண் நீதிபதியும் கொலிஜியத்தில் இடம்பெறவில்லை. இப்போதுதான் பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் நீதிபதி ஆர் பானுமதி கடந்த 1955-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி பிறந்தார். கடந்த 1988-ம் ஆண்டு நேரடியாக மாவட்ட நீதிபதியாக பானுமதி நியமிக்கப்பட்டு, மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். அதன்பின் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் 2013-ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பானுமதி நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டபின், மாவட்ட நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மாற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார், காலியாக இருந்த நீதிபதிகள் இடங்களை நிரப்பினார், ஊழியர்களை நியமித்தார். நீதிமன்ற ஊழியர்கள், அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புத்தகத்தையும் பதிப்பித்து அனைவருக்கும் வழங்கினார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர் பானுமதி பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் என்ற அடிப்படையில் நீதிபதி பானுமதி, நீதிபதி இந்து மல்ஹோத்ரா, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் உள்ளனர்.
இப்போது கொலிஜியத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன், ஆகியோருடன் ஆர் பானுமதியும் சேர்ந்துள்ளார். கொலிஜியத்தில் 2020-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி வரை, அதாவது அவரின் ஓய்வுக் காலம் வரை, பானுமதி பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...