Last Updated : 17 Nov, 2019 06:14 PM

1  

Published : 17 Nov 2019 06:14 PM
Last Updated : 17 Nov 2019 06:14 PM

தீர்ப்புப் பற்றி பேச வேண்டாம்; மக்களின் அவசியமான பிரச்சனைகளை பேசுங்கள்: காங்கிரசாருக்கு பிரியங்கா வேண்டுகோள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்

புதுடெல்லி,

கட்சியைச் சேர்ந்த யாரும் தீர்ப்புப் பற்றி பேச வேண்டாம்; மக்களின் உண்மையான பிரச்சனைகளை பேசுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளக்கூடிய மாபெரும் பொதுக்கூட்ட பேரணி ஒன்றை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நவம்பர் 30 அன்று நடைபெற உள்ள இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரங்ஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மூவரும் கலந்துகொண்டு பேச உள்ளனர். இவர்களுடன் கட்சியின் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேரணி ஆயத்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

''நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நாட்டை பட்டினி கிடக்க வைத்துள்ளது. அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 30 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு மெகா பேரணியை நடத்த உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்திற்கு மக்கள் திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அவர்களது ஆதரவைப் பெற முயலுங்கள்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு குறித்து பாஜக எவ்வளவு முயன்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை, எனவே காங்கிரஸ் சாதாரண மனிதர்களைப் பற்றிய உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மாபெரும் பேரணி பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்துவரும் வேலையின்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது. எனவே காங்கிரஸார் மக்களின் அடிப்படையான அவசியமான பிரச்சினைகளைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும்.''

இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x