Published : 17 Nov 2019 04:57 PM
Last Updated : 17 Nov 2019 04:57 PM
அயோத்தி நிலவிவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்தும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கும் எனத் தெரிவித்திருந்தது
இந்நிலையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்(ஏஐஎம்பிஎல்பி) இன்று லக்னோவில் கூடி விவாதித்தது. அதன்பின் ஏஐஎம்பிஎல்பி அமைப்பின் செயலாளர் ஜபார்யாப் ஜிலானி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
" அயோத்தியில் உள்ள மசூதியின் நிலம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. ஷாரியத் சட்டப்படி அந்த நிலத்தை யாருக்கும் தர முடியாது. அயோத்தியில் மசூதிக்குப் பதிலாக 5 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்வது எதிரானது என்று வாரியம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மசூதிக்கு மாற்றாக வேறு ஏதும் இருக்க முடியாது.
ஆதலால், உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் அளித்த தீர்ப்பு, 5 ஏக்கர் நிலம் அளித்தது ஆகியவற்றுக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம்
கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாபர் மசூதிக்குள் கொண்டு வந்து கடவுள் ராமர் சிலையை வைத்தது சட்டவிரோதம். அப்படி இருக்கும் போது எவ்வாறு அந்த சிலைகளைப் பூஜைகள் செய்யத் தகுதியானது என்று நீதிமன்றம் தெரிவிக்கும். இந்துமதத்தின்படி கூட அந்த சிலைகள் பூஜைகள் செய்ய உகந்தவை அல்ல
எங்களின் கூட்டம் முதலில் நட்வட்டால் உலேமா அரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், நேற்று இரவு லக்னோ மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. ஆதலால், மும்தாஜ் கல்லூரிக்குக் கூட்டத்தை மாற்றினோம் " எனத் தெரிவித்தார்
முன்னதாக, ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பும் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. ஜாமியத் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறுகையில், " அனைத்து சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்தபின்தான் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்தோம். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT