Published : 17 Nov 2019 10:45 AM
Last Updated : 17 Nov 2019 10:45 AM

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்க மீண்டும் வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சக்கூர்பூர் காலனியின் சாலைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது. இதையடுத்து, சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் திருவள்ளுவர் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து டெல்லியின் தமிழக இளைஞர் கலாச்சார அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.நடேசன் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும் போது, “சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளு வர் பெயர் வைக்க வேண்டும் என டெல்லிவாழ் தமிழர்கள் விரும்பு கின்றனர். இது தொடர்பாக, பிரத மர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் கிடைக்கவில்லை. இப்போது தமிழகத்தில் திருவள்ளுவர் பெயரில் அரசியல் செய்பவர்கள், அதை விடுத்து எங்கள் முயற்சிக்கு உதவினால் அவரது புகழை டெல்லியிலும் பரப்ப உதவியாக இருக்கும்” என்றனர்.

சக்கூர்பூர் மெட்ரோவுக்கு திருவள்ளுவர் பெயர் வைக்கக் கோரி, கடந்த ஆண்டு முதன்மை உள்ளுரை ஆணையராக இருந்த ந.முருகாணந்தமிடமும் மனு அளிக்கப்பட்டது. இதற்காக அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மூலம் முயற்சி செய்து வந்தார். பிறகு அவர் சென்னைக்கு மாற்றலாகி சென்றதால் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட சம்மந்தப் பட்டவர்களிடம் வலியுறுத்தும்படி கோரி, இந்த மனுவின் நகலானது டெல்லிவாழ் தமிழர்கள் சார்பில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

டெல்லியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணியில் அம்மாநில அரசுக்கு மத்திய அரசு 50 சதவீதம் நிதி அளிக்கிறது. எனினும், இதற்கு பெயர் வைப்பது உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x