Published : 17 Nov 2019 10:27 AM
Last Updated : 17 Nov 2019 10:27 AM

இந்து பெண்ணின் திருமணத்துக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளிவைப்பு: அயோத்தி தீர்ப்புக்கு பின் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இடிவெட்டி பகுதியில் உள்ள மசூதி முன்பு மணமக்கள்

என்.சுவாமிநாதன்

திருவனந்தபுரம்

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்புக்குப் பின் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணக்கமாக இருந்து இந்தியா ஓர் அமைதிப் பூங்கா என நிரூபித்தனர். அதைவிட உச்சமாக, தீர்ப்புக்கு மறுநாள் மிலாதுநபி தினத்தில் இந்து பெண் ஒருவரின் திருமணத்துக்காக மிலாதுநபி கொண்டாட்டத்தையே தள்ளிவைத்து நெகிழவைத்துள்ள னர் இஸ்லாமியர்கள்.

கேரளா மாநிலம், கோட்டயம் அருகில் உள்ளது பலேரி கிராமம். இங்குள்ள இடிவெட்டி பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியை அடுத்து இந்து குடும்பம் ஒன்றின் வீடும் உள்ளது. இந்த பள்ளிவாசலின் ஜிம்ஆ மசூதி கமிட்டி சார்பில், மிலாது நபி கொண்டாட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, மசூதியை ஒட்டி இருக்கும் இந்து குடும்பத்தில் பிரதிஷா என்னும் பெண்ணுக்கு, மிலாதுநபி நாளில் அவர்களுடைய வீட்டு வளாகத்தில் திருமணம் நடத்த இருப்பது பற்றியும் பேச்சுவந்தது.

இந்த வீட்டின் சுற்றுச்சுவரை யொட்டி, முஸ்லிம் சிறுவர்கள் பயிலும் அரபி பாடசாலையும் இருக் கிறது. மசூதியை அடுத்து இருக்கும் தனது இல்லத்தில் வைத்து மணமகன் பிரசாத்தை மிலாதுநபி நாளில் பிரதிஷா கைபிடிப்பது தெரியவந்ததும், நாம் ஏன் மிலாதுநபி கொண்டாட்டத்தை ஒருவாரம் தள்ளிவைக்கக் கூடாது என ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கடைசியில் மிலாது நபி கொண் டாட்டத்தை ஒருவாரம் தள்ளிவைப் பது என்று ஏகமனதாக முடிவும் செய்யப்பட்டது. இத்தனைக்கும் மணப்பெண் வீட்டில் இருந்து யாருமே இப்படியான கோரிக் கையை எழுப்பாத சூழலில் இஸ்லாமியர்களின் இந்த முடிவு கேரளம் முழுவதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இந்த முடிவுக்கு விதைபோட்ட இடிவெட்டி மசூதி கமிட்டியின் செயலாளர் அப்துர் ரகுமான் ‘தி இந்து’விடம் கூறுகை யில், ‘மிலாதுநபி எங்களின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று. அன் றைய நாளில் மதரஸா (அரபிப் பள்ளி) மாணவர்களுக்கு பல போட்டிகளும் நடத்துவோம். எங்களின் இறைத் தூதர் முகமது நபியின் பிறப்பைக் கொண்டாடும் அந்த நாள் எங்களுக்கான முக்கியத் திருவிழா.

இந்தநாளில் முகமதுநபியின் வாழ்வியல் போதனைகளை உரக்கச் சொல்வோம். அதைக் கேட்பதற்கு எங்கள் கமிட்டிக்கு உட்பட்ட மக்கள் பெருந்திரளாக வருவார்கள். அதனால் ஏராளமான பைக், கார் என இந்த தெருவே நிறைந்துபோகும். பள்ளிவாசல் கமிட்டி சார்பில் உணவு சமைத்து ஏழைகளுக்கும் வழங்கப்படும். ஆனால் இதெல்லாம் பக்கத்து வீட்டில் திருமணம் வைத்திருப் போருக்கு இடையூறாக இருக்குமே என யோசித்தோம். அதனால்தான் விழாவையே தள்ளிவைத்தோம். அல்லா நமக்கு உபகாரம் செய் திருப்பதுபோல் நீயும் சக மனிதருக்கு உபகாரம் செய் என்றுதான் இஸ்லாமும் போதிக் கிறது. இதோ இந்துப் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு எங்கள் மசூதியில் மிலாது நபி வரும் 17-ம்தேதி (இன்று) நடக் கிறது”என்கிறார்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் பிரதிஷா - பிரசாத் ஆகியோர் மசூதியின் கமிட்டி உறுப்பினர்களைப் பார்த்து தங் களுக்காக மிலாது நபி விழாவை தள்ளிவைத்ததற்கு நன்றி தெரிவித் தனர். பிரதிஷாவின் தந்தை நாராய ணன் நம்பியார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன நிலையில், தாய் இந்திராவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் பிரதிஷா. முகம் ததும்ப புன்னகையோடு இந்திரா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘நாங்கள் கோரிக்கையே வைக்காமல் இதை செய்து நெகிழவைத்து விட்டனர். கூடவே மிலாதுநபி அன்று மசூதி யின் கமிட்டி உறுப்பினர்கள் என் மகளின் திருமணத்துக்கும் வந்து மணமக்களை வாழ்த்தியும் சென் றது மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை திருமணத்துக்கு நாள் குறிக்கும்போதே மிலாதுநபி எனத் தெரிந்திருந்தால் நாங்களே வேறு முகூர்த்தநாள் பாத்திருப்போம். ஆனால் அதை கவனிக்கத் தவறி விட்டோம். அடுத்த வீட்டிலேயே இருப்பதால் நாங்களும்கூட மசூதி யின் திருவிழாக்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறோம். எங்க ளுக்குள் மதம் வேறாக இருந்தா லும், இதயம் அன்பால் இணைந் திருக்கிறது” என நெகிழ்ந்தார்.

திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு சென்ற பிரதிஷா, கடந்த புதன்கிழமை முதல் மறுவீடாக தாய் வீட்டுக்கு வந்தார். இந்த நிகழ்வுக்கு மசூதியின் கமிட்டி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது பிரதிஷாவின் குடும்பம்.

கட்டித் தழுவிய இந்து கோயில் நிர்வாகிகள்

கேரளம் முழுவதும் ஜமாஅத் நிர்வாகிகளும், மதரஸா மாணவர்களும் மிலாதுநபி ஊர்வலம் நடத்தினர். இவர்களுக்கு வழிநெடுகிலும் காத்திருந்து சர்பத், பழச்சாறு, இனிப்புகளை மாற்று மதத்தினர் வழங்கி நெகிழ வைத்துள்ளனர். சில இடங்களில் இந்துகோயில் நிர்வாகிகள் காத்திருந்து, கட்டித்தழுவி மிலாது நபி வாழ்த்துகளை பகிர்ந்திருக்கின்றனர். இந்த ஒற்றுமைதானே நம் தேசத்தின் பலம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x