Published : 16 Nov 2019 02:41 PM
Last Updated : 16 Nov 2019 02:41 PM
பொருளாதார மந்தநிலை குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பாஜக, நாட்டின் யதார்த்தத்தை அறியாமல் மக்களை அவமதித்து வருவகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இரண்டாவது முறை பொறுப்பேற்றுள்ள பாஜக ஆட்சியில், இம்முறை மிகப்பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கு கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, ''பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது. ஆனால், விமான நிலையங்களிலும் ரயில்களிலும் கூட்டம் நிரம்புகிறது. மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் குறிக்கிறது'' என்று கூறினார்.
பாஜக அமைச்சரின் பதில் அடாவடித்தனமானது. பாஜகவுக்கு யதார்த்தம் தெரியவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களுடன் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று கூறியதாவது:
"பாஜக அமைச்சர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள். மக்களை அவர்கள் அவமதிக்கிறார்கள். ஒருபுறம், மக்கள் உணவு உண்பதற்குத் தேவையான பணம் இல்லாததால் அவர்களுக்குத் தேவையான ரொட்டி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். மறுபுறம், பாஜகவின் அடாவடி அமைச்சர்கள் திருமணங்கள் நடப்பதாகக் கூறி மக்களை அவமதிக்கிறார்கள். மக்களின் திருமணங்களை நிறுத்த அவர்கள் விரும்புகிறீர்களா?
இப்படி பேசுவது பாஜகவின் ஆணவமா? மேலும் மக்களின் துயரங்களை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களால் கீழ்மட்டத்தில் உள்ள யதார்த்தத்தைப் பார்க்க முடியவில்லை.
சமையல் எண்ணெய் தேவை 10 சதவீதம் குறைந்துள்ளது. கிராமப்புறப் பொருளாதாரம் 9% வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பு காரணமாக நகர்ப்புறங்களில் கூட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் தேவைகள் 15 சதவீதமும், சமையல் எண்ணெய் தேவை 10 சதவீதமும் குறைந்துள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் சமீபத்திய தரவு கூட வீழ்ச்சியடைந்துள்ளது. பாஜக யதார்த்தத்தின் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.''
இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT