Last Updated : 16 Nov, 2019 12:47 PM

6  

Published : 16 Nov 2019 12:47 PM
Last Updated : 16 Nov 2019 12:47 PM

பாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் : கோப்புப்படம்

மும்பை

மகாராஷ்டிராவில் உறுதியாக ஆட்சி அமைப்போம் என்று பாஜக கூறுவது மாநிலத்தில் குதிரை பேரத்துக்கு அந்தக் கட்சி தயாராகிவிட்டதைக் காட்டுகிறது என்று சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்ததையடுத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பேச்சைத் தொடங்கியுள்ளன. மூன்று கட்சிகளுக்கு இடையிலான குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆட்சி அமைப்பதற்கான சூழலையும் உருவாக்கி வருகின்றன.

ஆனால், இதற்கிடையே முன்னாள் முதல்வர் தேவந்திர பட்னாவிஸ், மீண்டும் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தில் பாஜக குதிரை பேரத்துக்குத் தயாராகி வருகிறது என்று குற்றம் சாட்டி சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

"சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தால் 6 மாதம் கூட நிலைக்காது என்று பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். எங்களின் இந்தப் புதிய கூட்டணி பலருக்கு வயிற்று எரிச்சலை, வலியை ஏற்படுத்தியுள்ளது.

105 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜக முதலில் ஆளுநரிடம் தங்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று கூறி ஆட்சி அமைக்க மறுத்தது. ஆனால், இப்போது 119 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. 105 எம்எல்ஏக்கள் இருந்தபோது ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாதவர்கள், இப்போது எப்படி தங்களால் ஆட்சி அமைக்க முடியும்? பெரும்பான்மையைக் கொண்டு வருவோம் எனக் கூறுகிறார்கள்.

பாஜகவின் உள்நோக்கம், நம்பிக்கை என்பது குதிரை பேரம்தான். அது இப்போது வெளிப்பட்டு விட்டது. வெளிப்படை நிர்வாகத்தை அளிப்போம் என்று பேசியவர்களின் முகம் இப்போது ஆதாரமாக வெளிப்பட்டு விட்டது. அறத்துப் புறம்பான வழியில் ஆட்சி அமைப்பது இந்த மாநிலத்துக்கு உகந்த, பொருத்தமான செயல் அல்ல.

மத்திய அமைச்சர் கட்கரி, 'அரசியல் என்பது கிரிக்கெட் போன்றது. களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், தோற்கும் நிலையில் உள்ள அணி வெற்றி பெறலாம்' என்று தெரிவித்துள்ளார். ஆனால், எங்களைப் பொறுத்தவரை கட்கரி கிரிக்கெட்டைத் தொடர்புபடுத்திக் கூறவில்லை. அவர் சிமெண்ட், எத்தனால் உள்ளிட்ட பொருட்களைத் தொடர்புபடுத்திப் பேசியுள்ளார். கிரிக்கெட் இப்போது வர்த்தகத்தைக் காட்டிலும் நல்ல வியாபாரமாகிவிட்டது. குதிரை பேரமும், ஸ்பாட், மேட்ச் பிக்ஸிங்கும் கிரிக்கெட்டிலும் வந்துவிட்டது.

விளையாட்டு மூலம் கிடைத்த வெற்றியா அல்லது பிக்ஸிங் மூலம் கிடைத்ததா என எப்போதுமே கிரிக்கெட் மீது சந்தேகம் இருக்கும். ஆனால், கட்கரி மகாராஷ்டிரா அரசியலை கிரிக்கெட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளதும் சரியானதுதான்".

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x