Published : 16 Nov 2019 11:40 AM
Last Updated : 16 Nov 2019 11:40 AM
கார்த்திகை மாதம் நாளை பிறப்பதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.
எந்தவிதமான அசம்பாவிதங்களும், போராட்டங்களும் நடக்காமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்துள்ளது.
கார்த்திகை 1-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டல பூஜையாகும். இதற்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை நடையைப் பூஜைகள் செய்து மேல்சாந்தி கண்டரரு மகேஷ் மோகனரரு திறந்து வைத்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குவார்.
அதன்பின் புதிய மேல்சாந்தியாக பொறுப்பு ஏற்கும் ஏ.கே.சுதிர் நம்பூதரிக்கு, கண்டரரு மகேஷ் மோகனரரு மந்திரங்கள் சொல்லிக் கொடுப்பார். அதேபோல, மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதரி பொறுப்பு ஏற்கிறார். அதன்பின் சபரிமலையில் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
கார்த்திகை முதல் நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதிர் நம்பூதிரி ஐயப்பன் கோயிலில் முறைப்படி பூஜைகள் செய்து மண்டல பூஜையைத் தொடங்கி வைப்பார்.
காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27-ம் தேதி நடைபெறும்.
மண்டல பூஜைக்காக இருமுடி கட்டி சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல், பம்பை வழியாக சபரிமலைக்கு இன்று நண்பகல் 2 மணிக்கு மேல்தான் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மனுவை மாற்றியது. அதேசமயம், பெண்கள் செல்லத் தடை ஏதும் விதிக்கவில்லை.
இதனால், இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்கள் 36க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார்கள். ஆனால், சபரிமலை அமைதியைக் குலைக்கும் வகையில் விளம்பரத்துக்காக வரும் பெண் ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு ஏதும் அரசு அளிக்காது என்று தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம் நீதிமன்றத்தின் ஆணை பெற்று பெண்கள் கோயிலுக்கு வந்தால் அதற்குத் தடையில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், பூமாதா இயக்கத் தலைவர் திருப்தி தேசாய், வரும் 20-ம் தேதி சபரிமலைக்குச் செல்வேன், தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சபரிமலைக்குச் செல்ல முயன்ற திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.
மேலும் சபரிமலையின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் எச்சரித்துள்ளார்.
இதனால், சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்ட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள்.
போலீஸார் பாதுகாப்பை 4 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். வரும் 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 2,551 போலீஸார் கோயிலைச் சுற்றிப் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள். 2-வது கட்டமாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை 2,539 போலீஸாரும், டிசம்பர் 15 முதல் 29-ம் தேதி வரை 2,992 போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.
டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரையிலான முக்கியமான காலகட்டத்தில் கோயிலைச் சுற்றிப் பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.
ஒட்டுமொத்த போலீஸ் பாதுகாப்பு கூடுதல் டிஜிபி ஷேக் தார்வேஷ் ஷாகிப் மேற்பார்வையில் நடக்கிறது. 24 போலீஸ் கண்காணிப்பாளர்கள், இணை கண்காணிப்பாளர்கள், 112 துணை கண்காணிப்பாளர்கள், 264 ஆய்வாளர்கள், 1,185 துணை ஆய்வாளர்கள், 8,402 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தவிர 30 பெண் போலீஸ் ஆய்வாளர்கள் உள்பட 307 போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் மருத்துவர்கள் குழுக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முறையான கழிப்பறை வசதிகளை கேரள அரசு போதுமான அளவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT