Published : 15 Nov 2019 12:53 PM
Last Updated : 15 Nov 2019 12:53 PM
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சிதான் ஆட்சியில் இருக்கப்போகிறது என்று அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை இல்லாததால் பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷியாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து குறைந்த செயல்திட்டம் வகுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக காங்கிரஸ் தலைவர்களுடனும், என்சிபி தலைவர்களுடனும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு மும்பையில் இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
முதல்வர் பதவியை என்சிபி, காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா பகிர்ந்து கொள்ளுமா?
காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் மாநிலத்தின் நலன், மக்களின் நலன் ஆகியவற்றை முன்வைத்து குறைந்தபட்ச செயல் திட்டம் தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.
ஒரு கட்சி ஆளும் அரசானாலும் அல்லது கூட்டணி ஆட்சியானாலும் சரி நிர்வாகத் திட்டம் என்பது மிகவும் அவசியம். மாநிலத்தில் வறட்சி, பருவம் தவறிய மழை, உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற முன்னெடுப்புகள் அவசியம். எங்களுடன் இருப்பவர்கள் அனுபவமற்ற நிர்வாகிகள். அவர்களின் அனுபவத்தில் இருந்து நாங்கள் பயன் பெறுவோம்.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை எதிராக அரசியல் செய்துவிட்டு இப்போது கூட்டணி அமைப்பது முரணாக இல்லையா ?
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸின் தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காவும், மகாராஷ்டிரா மேம்பாட்டுக்காகவும் உழைத்துள்ளார்கள்.
முதல்வர் பதவியை மற்ற கட்சிகளுக்கு சுழற்சி முறையில் வழங்குவீர்களா?
மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவின் ஆட்சிதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யார் தடுத்தாலும், தடுக்க முயற்சித்தாலும் மாநிலத்தின் முதல்வர் சிவசேனாவில் இருந்துதான் வருவார். மகாராஷ்டிர மாநிலத்துடனான எங்களின் தொடர்பு தற்காலிகமானது அல்ல. 50 ஆண்டுகளுக்கும் மேலானது.
ஒருபுறம் தீவிர இந்துத்துவா கொள்கை மறுபுறம் காங்கிரஸ் எதிர்ப்பு ஆகியவற்றை வைத்து காங்கிரஸ் கட்சியுடன் எவ்வாறு கூட்டணியை வைப்பீர்கள்?
ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்களால் முடிவு எடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, நிலைப்பாடு இருக்கிறது. ஆனால் அதைத் தவிர்த்து குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில்தான் ஆட்சி அமைகிறது. இது மாநிலத்தின் நலனுக்காகச் செய்யப்படும் முயற்சியாகும்.
இதற்கு முன் பாஜகவில் இருந்த மூத்த தலைவர் வாஜ்பாய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைவராக இருந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்துதான் ஆட்சி நடத்தினார். மகாராஷ்டிராவில் சரத்பவார், முற்போக்கு ஜனநாயக முன்னணி என்று ஆட்சி அமைத்தார். கொள்கைகள், சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருந்த கட்சிகள் இதற்கு முன் ஒரே தளத்தில் பயணித்துள்ளன என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...