Published : 14 Nov 2019 08:02 AM
Last Updated : 14 Nov 2019 08:02 AM
குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை முறைகேடாக பயன்படுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க புதிய சட்டம் வருகிறது.
சில தனியார் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படும் வர்த்தக விளம்பரங்களில் பிரதமர் மற்றும் தேசியக் கொடியின் படங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பிரதமரின் பெயர், படம் மற்றும் தேசியக் கொடி, அசோக சக்கரம், நாடாளுமன்ற அதிகாரபூர்வ முத்திரை, உச்ச நீதிமன்றம் போன்றவற்றை விளம்பரத்துக்காகவோ அல்லது முறைகேடாகவோ பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
விரைவில் சட்டம்
மீண்டும் அதே தவறை செய்தால் அபராதம் அதிகமாக விதிக்கப்படுவதில்லை. இதனால், இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்திருந்தன. மத்திய அரசு விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரின.
இந்நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமரின் படங்கள், தேசிய சின்னங்கள் ஆகியவற்றை தவறாகவோ விளம்பர நோக்கத்துடனோ அதிகாரபூர்வமற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.5 லட்சம் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் சட்டம் வருகிறது.
இதற்காக ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி ஆலோசனைகளுக்குப் பின் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT