Published : 13 Nov 2019 04:35 PM
Last Updated : 13 Nov 2019 04:35 PM
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.
ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வந்தன.
எனினும் சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
எனினும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை சிவசேனா மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுவான செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுபற்றி உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘மகாராஷ்டிராவில் புதிய அரசு தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. சரியான விவரங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment