Published : 13 Nov 2019 10:41 AM
Last Updated : 13 Nov 2019 10:41 AM
மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பும் சிவசேனா தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க என்சிபி, காங்கிரஸ் இடையே முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 எம்எல்ஏக்கள் கொண்ட தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தும் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் அதை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது. 2-வது பெரிய கட்சியான 56 எம்எல்ஏக்கள் கொண்ட சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை சிவசேனா கோரியிருப்பதாகத் தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே கூடுதலாக 2 நாட்கள் அவகாசத்தை ஆளுநரிடம் கேட்டார். ஆனால், ஆளுநர் 24 மணிநேரம் மட்டுமே சிவசேனா அளித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டார்.
இந்த சூழலில் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த கட்சியாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடித்ததை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை.
இதனால், ஆளுநர் கோஷியாரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கேட்டுக்கொண்டார் இதையடுத்து, நேற்று மாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆனால், சிவேசனா தலைமையில் ஆட்சி அமைவதற்காக அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.
அதேபோல சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக என்சிபி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்ததலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல், பிரிதிவிராஜ் சவான் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் எந்த உறுதியான முடிவும் எடுக்கவில்லை.
பாஜகவுக்கு தற்போது 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், சுயேச்சை மற்றும் சிறுகட்சிகளின் ஆதரவும் 29 எம்ஏல்ஏக்கள் வரை இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால், பாஜகவுக்கு ஏறக்குறைய 135க்கு குறைவில்லாமல் எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பதால், ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான நாராயண் ரானே கூறுகையில், " தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்தேன். அப்போது அவர் நாம் ஆட்சி அமைக்க முயற்சிப்போம் என்றார். மகாராஷ்டிராவில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதைச் செய்வோம். என்னுடைய கட்சிக்கு தேவையான உதவிகளைச் செய்வேன். சிவேசனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியைப் பார்த்துவிட்டுப் புரிந்து கொள்ளவில்லை என்றால் சிவசேனா முட்டாளாகி விடும்" எனத் தெரிவித்தார்.
இதனால் விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான திட்டத்தை பாஜக செயல்படுத்தி, மற்ற கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மும்பையில் நேற்று இரவு பாஜக முக்கிய உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்குபின் மூத்த தலைவர் சுதிர் முன்கந்திவார் கூறுகையில், " மாநிலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், நிகழ்வுகளை உன்னிப்பாக பார்த்து வருகிறோம். இப்போதுவரை சிவசேனாவுக்கு காங்கிரஸ், என்சிபி ஆதரவு அளிப்பதாக உறுதிதரவில்லை. சிவசேனா தலைவர்களை சந்திக்கவும் இல்லை. அனைத்து விஷயங்களையும் நாங்கள் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்ததற்கு சிவசேனதான் காரணம். மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கவில்லை. சிலரின் பிடிவாத குணத்தால் நிலையான ஆட்சி அமைக்க முடியவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்று பேசிய சிலரால் இன்னும் கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை, கடிதத்தைக்கூட வாங்க முடியவில்லை." எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் நேற்றுக் கூறுகையில், " மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்தது துரதிருஷ்டம். பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மையை மக்கள் அளித்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. விரைவில் மாநிலத்தில் பாஜக தலைமையில் நிலையான ஆட்சி அமையும். மகாராஷ்டிரா மக்கள் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டுவருகிறார்கள். அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT