Published : 02 May 2014 09:20 AM
Last Updated : 02 May 2014 09:20 AM

தமிழகத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது: சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

தமிழகத்தில் தீவிரவாதம் பெரிய அளவில் வளர்ந்து வருவதையே சென்னையில் நடந்துள்ள குண்டுவெடிப்பு காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “ஓட்டு வங்கியை மனதில் வைத்து திராவிட கட்சிகளான அதிமுக-வும், திமுக-வும் அரசியல் நடத்தியதன் விளைவால் இந்த அளவுக்கு தீவிரவாதம் வளர்ந்துள்ளது. தேசபக்தி உள்ள கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். அடுத்த சட்டசபை தேர்தலில்தான் அந்த மாற்றம் வரும்” என்றார்.

நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஓட்டுச் சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்று சட்டத்தில் உள்ளது. மோடி நடத்தியது பொதுக்கூட்டம் அல்ல. கூட்டம் கூடினால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். முட்டாள்தனமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஏர்செல் - மேக்சிஸ் விற்பனை வழக்கு குறித்து பதிலளித்த போது, “ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது தான் இந்த விற்பனை நடந்துள்ளது. அவரையும் மாறன் சகோதரர்களையும் காப்பாற்ற, தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரி மூலம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேக்சிஸ் நிறுவனம் தற்போது சவூதி அரேபியா நிறுவனத்துக்கு பங்குகளை விற்று விட்டது. மத்தியில் ஆட்சி மாறியதும் ப.சிதம்பரம், அவரது மகன் மீதும் விசாரணை நடக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x