Published : 12 Nov 2019 01:19 PM
Last Updated : 12 Nov 2019 01:19 PM

மகாராஷ்டிராவில் பாஜகவின் வேலையை எளிதாக்குகிறது காங்கிரஸ்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் ப்ரீத்தி சர்மா : கோப்புப்படம்

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி ஆமைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் காங்கிரஸ் எளிதாக்குகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரீத்தி சர்மா மேனன் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது. சிவசேனாவுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், அடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் நேற்றிலிருந்து பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். ஆனால், எந்தவிதமான உறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை.

சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானதால், முடிவு எடுக்கத் தாமதமாகிக்கொண்டே வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சி எடுக்கும் தாமதமான முடிவுகள், பாஜகவுக்கு எளிதாக அமையும் என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் ப்ரீத்தி சர்மா ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துக் கூறுகையில், "காங்கிரஸ் தலைமை எப்போதம் தங்கள் கட்சியை தேசத்தின் முன் ஏதாவது ஒரு சூழலில் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். மக்களவைத் தேர்தலின்போது பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைப் பிடிவாதமாக மறுத்தார்கள்.

இது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்து, ஒட்டுமொத்தமாக இடங்களை வாரிச் சென்றது. இப்போது மகாராஷ்டிராவில் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதுபோன்ற தேக்கமான மனநிலை காங்கிரஸ் கட்சியை அழிவுக்குத்தான் விரைவில் கொண்டு செல்லும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தேசியவாத காங்கிரஸில் சேரவேண்டும். காங்கிரஸ் அழிய இதுதான் சரியான நேரம்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x